'எங்கள் நாட்டை வீழ்த்திவிட நினைத்து தாதாவாக செயல்படும் அமெரிக்காவின் வரலாற்றின் கடைசி பக்கங்களை எழுதப்போவது நாங்கள்தான்' என்று வட கொரியா தெரிவித்துள்ளது.தென் கொரியா - அமெரிக்க படைகள் வரும் மார்ச் மாதம் வழக்கமான தங்களது ராணுவ கூட்டுப் பயிற்சியை துவங்க உள்ளன.இந்த முறை ராணுவ கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டால் அதற்கு எதிராக அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.இந்த நிலையில், வட கொரிய அதிபர் வசம் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "போர்ச் சூழலை கொளுத்திவிட்டு தீவிரப்படுத்தும் வேலைகளைதான் அமெரிக்கா செய்கிறது. தொடர்ந்து வட கொரியாவின் பலத்தை வீழ்த்த அனைத்து வேலைகளையும் அமெரிக்கா பார்த்து வருகிறது.ஏகாதிபத்தியவாதிகளாக இருக்க விரும்பும் அமெரிக்காவுடன் உடன்பட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. தாதாவாக வலம் வரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை ஏற்படுத்த எப்போதும் வட கொரிய மக்களும் ராணுவமும் விரும்பவில்லை.அமெரிக்க வரலாற்றின் கடைசிப் பக்கங்களை எழுதப்போவது வட கொரியாதான். இதற்கு எந்த வகையான தாக்குதலிலும் நாங்கள் இறங்குவோம். தரைவழி, வான்வழி, கடல்வழி, கடலுக்குகீழ் அல்லது சைபர் மோதல் என எந்த வகையிலான தாக்குதல்களையும் நாங்கள் அமெரிக்கா மீது நடத்துவோம்" என்று அதில் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளது.வட கொரியா மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். ஆனால் இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு இல்லை என்று வட கொரியா தெரிவித்தது.
இதனை அடுத்து கடந்த ஜனவரி 22-ஆம் தேதி சைபர் தாக்குதல் குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா வடகொரியாவைக் குறிப்பிட்டு, "உங்களது ராஜ்ஜியம் வீழ்வதை கண்கூடாக பார்க்கும் நேரம் வரும்" என்று காட்டமாக பேசியிருந்தார்.ஒபாமாவின் பேச்சுக்கான பதிலாக அமெரிக்காவைக் குறிவைத்து வடகொரியா இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment