தேசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில், சர்வீசஸ் அணியின் ஜித்து ராய் (10 மீ., பிஸ்டல், தனிநபர், அணி) இரண்டு தங்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் தமிழகத்தின் அந்தோனி அமல்ராஜ், ஷாமினி குமரேசன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். கேரளாவில், 35வது தேசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில், 200.9 புள்ளிகள் பெற்ற சர்வீசஸ் அணியின் ஜித்து ராய், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சர்வீசஸ் அணியின் மற்றொரு வீரர் ஓம்கார் சிங் (197.5 புள்ளி), மத்திய பிரதேசத்தின் அமித் குமார் பிலானியா (177.9) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு துப்பாக்கி சுடுதலில், ஜித்து ராய், ஓம்கார் சிங், குர்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய சர்வீசஸ் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம், இம்முறை ஜித்து ராய் 4வது பதக்கத்தை (3 தங்கம், ஒரு வெண்கலம்) கைப்பற்றினார். அடுத்த இரண்டு இடங்களை பஞ்சாப், உ.பி., அணிகள் பிடித்தன. ஆண்களுக்கான தனிநபர் ‘டபுள் டிராப்’ பிரிவு துப்பாக்கி சுடுதலில், பஞ்சாப் வீரர் ரஞ்சன் சோதி 55 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலத்தை முறையே அரியானாவின் அன்குர் மிட்டல், சங்ராம் தாஹியா கைப்பற்றினர். பெண்கள் அணிகளுக்கான ‘டபுள் டிராப்’ துப்பாக்கி சுடுதலில், அசிலா கில்ஜி, அசியா கில்ஜி, நிவேதா ஆகியோர் அடங்கிய தமிழக அணி 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது. தங்கம், வெள்ளிப் பதக்கத்தை முறையே மத்திய பிரதேசம், சர்வீசஸ் அணிகள் வென்றன.பெண்களுக்கான தனிநபர் 50 மீ., ‘ரைபிள் 3 பொஷிசன்’ பிரிவு துப்பாக்கி சுடுதலில், தமிழகத்தின் சந்தியா வின்பிரட் 434.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். கேரளாவின் எலிசபெத் சுசன் கோஷி (445.9), மகாராஷ்டிராவின் வேதாங்கி (444.7) முதலிரண்டு
இடங்களை பிடித்தனர். டேபிள் டென்னிஸ்: ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பைனலில், தமிழகத்தின் அந்தோனி அமல்ராஜ், குஜராத்தின் தேவேஷ் காரியாவை சந்தித்தார். அபாரமாக ஆடிய அமல்ராஜ் 4–1 (8–11, 11–7, 11–8, 12–10, 11–8) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பைனலில், தமிழகத்தின் ஷாமினி குமரேசன், மேற்கு வங்கத்தின் அன்கிதா தாஸ் மோதினர். அசத்தலாக ஆடிய ஷாமினி 4–3 (7–11, 6–11, 10–12, 11–3, 11–3, 11–9, 11–6) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி னார்.நீச்சல்: பெண்களுக்கான 50 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவு நீச்சல் போட்டியில், தமிழகத்தின் ஷெர்லின் தேவதாசன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 800 மீ., ‘பிரீஸ்டைல்’ நீச்சல் போட்டியில், கேரளாவின் சஜன் பிரகாஷ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு கேரள வீரர் ஆனந்த் அனில்குமார் வெண்கலத்தை கைப்பற்றினார்
No comments:
Post a Comment