Friday 27 February 2015

BSNL ஊழியர்கள் மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

BSNLநிறுவனத்தைப் பாதுகாத்திட வரும் மார்ச் 17முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கிட BSNLஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.BSNL நிறுவனத்தைப் பாதுகாத்திட BSNL ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு கோடிபேர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றனர். அந்த கையெழுத்துக்களை பிரதமரிடம் ஒப்படைப்பதற்கான மாபெரும் பேரணி புதுதில்லியில் 25.02.15 அன்று நடைபெற்றது.
BSNL கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அனைத்து சங்கங்களையும் சார்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜன்பத் வழியாக நாடாளுமன்ற வீதிவரை வந்தார்கள். அங்கே நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் BSNL ஊழியர் சங்கங்களின் கன்வீனர் VAN. நம்பூதிரி, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் P. அபிமன்யு மற்றும் அனைத்து BSNL சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் உரையாற்றினார்கள்.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் P. அபிமன்யு கூறியதாவது:“மத்திய அரசுக்குச் சொந்தமான   BSNL நிறுவனத்தை மேம்படுத்தாமல், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றுக்குச் சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.2006 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் BSNL நிறுவனத்தை மேம்படுத்த எந்தத் திட்டத்தையும் அமல்படுத்தவோ, புதிய கருவிகளை வாங்கவோ மத்திய அரசு அனுமதிக்க வில்லை.மாறாக, தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்றவற்றிற்கு பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.இதேபோல் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் BSNL தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடனுதவி அளித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் BSNL நிறுவனத்துக்கு எந்த வங்கியும் கடன் அளிக்க முன்வருவதில்லை.இவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.இவ்வாறு மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. தனியார்நிறுவனங்களுக்கு வழங்குவது போல் BSNL நிறுவனத்துக்கும் சலுகைகளை வழங்கி, நிறுவனத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். மத்திய அரசு  BSNL நிறுவனத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணிக்குமானால் வரும் மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கிடவும் முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறினார்.
டெல்லி பேரணிக்கு  தமிழகத்திலிருந்து,BSNL ஊழியர்சங்கத் தலைவர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் V.P.. இந்திரா உட்பட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்திருந்தார்கள்..தீக்கதிர்  

No comments: