மதுரையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் 5-ஆம் தேதி சம்பளம் வழங்கக்கோரி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் (CITU) முற்றுகையிட்டனர். மதுரை மாநகராட் சியில் உள்ள நான்கு மண்டலங் களிலும் ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்று கிறார்கள். இவர்களுக்கு கடந்த 1.4.2014 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர், தினக்கூலியாக 205 ரூபாய் வங்கி மூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலரும் 1.7.2014 அன்று அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் வங்கி மூலம் சம்பளம் வழங்கப்படும் எனஅறிவித்தார். 1.10.2014 அன்று மாநகராட்சி ஆணையாளர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கப்படும் என ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். கடந்தாண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு அதை அமல்படுத்தாத மதுரை மாநகராட்சி, மேலும் இரண்டு உத்தரவுகளை வெளியிட்டும் அதையும் அமல்படுத்தவில்லை. மாதம் மாதம் வழங்கவேண்டிய சம்பளத்தை ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் வழங்குவதாகவும், ஜனவரி மாதச்சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை எனக்கூறி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் எஸ்.விஜயன் தலைமைவகித்தார். பொதுச்செயலாளர் ம.பாலசுப்பிரமணியன், பொருளாளர் எம்.பாண்டி, கௌரவத்தலைவர் கே.கருப்பன், துணைப் பொதுச்செயலாளர் இரா.இராசகோபால் உள்ளிட்ட ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், மதுரை மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் அறையின் முன்அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளிக்கும் தினக்கூலியாக 240 ரூபாயை மாநகராட்சி வழங்குகிறது. ஆனால், ஒப்பந்ததாரர் 176 ரூபாய் தான் வழங்குகிறார். அந்தப்பணத்தையும் காலத்தில் வழங்கவில்லை என்றுதுப்புரவுத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். கடந்த வெள்ளியன்று, தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் சி.கதிரவனிடம் கூறியதற்கு, சம்பளம் போடப் பணம்இல்லை எனக்கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய மாநகராட்சித் தொழிலாளர் சங்கத்தலைவர்கள், சம்பளம் வழங்கப்படாவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அறிவித்தார்கள்.இதையடுத்து ஆணையர் சி.கதிரவன், மேயர்வி.வி.ராஜன் செல்லப்பாவுடன், துப்புரவுத் தொழிலாளர்கள் சம்பளப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம், தொழிற் சங்கத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜனவரி மாதச்சம்பளத்தை இரண்டு நாட்களுக்குள் வழங்கிடுவதாகவும், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கி விடுவதாகவும் கூறினார். வங்கி மூலம்அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இரண்டு நாட்களுக்குள் சம்பளம் வழங்கவில்லையென்றால், அனைத்துசங்கங்களை இணைத்துபோராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று சங்கத்தலைவர்கள் எச்சரித்தனர். இதனையடுத்து இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment