வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, வரும் 25-ஆம் தேதி முதல் அவர்கள் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மும்பையில் இந்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் அமைப்புக்கும் (ஐபிஏ) வங்கி ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே திங்கள்கிழமை ஐந்து மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-வங்கி ஊழியர்களுக்கு 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதற்காக வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஏ அமைப்பினருடன் இதுவரை 18 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்தியன் வங்கியின் தலைவரும் இந்திய வங்கிகள் அதிகாரிகள் அமைப்பின் தலைவருமான டி.எம்.பாசின் தலைமையில் மும்பையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஊதிய உயர்வு பலன் எப்போது? நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் 15 சதவீத ஊதிய உயர்வு அளிப்பது, ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் வங்கி நிர்வாகத்துக்கு கூடுதலாக ரூ.4,725 கோடி செலவாகும்.பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து நிர்வாகத் தரப்புக்கும் (ஐபிஏ) வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே 90 நாள்களுக்குள் உடன்பாடு செய்து கொள்ளப் படும்.உடன்பாடு ஏற்பட்ட பிறகு ஊதிய உயர்வு நிலுவை, மாதந்தோறும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை ஆகியவை அமலுக்கு வரும் என்று சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment