மோடிக்கு கார்ப்பரேட் வழங்கிய நன்கொடைஜனநாயக சீர்திருத்த அமைப்பு பட்டியலை வெளியிட்டது
பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன்கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம். அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையை திரட்டுகின்றன.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும்,தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார். ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. தில்லி தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி மொத்தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
:-பாரதிய ஜனதா கட்சி கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-2014-ம் ஆண்டில் ரூ.87.67 கோடியாகவும்,
2014-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது. அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012-2013-ம் ஆண்டை விட 2014-2015-ம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக்கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012-2013-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-2014-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத்பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-2014-ம் ஆண்டில் அளித்து உள்ளது.தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012-2013-ம்ஆண்டை விட 158 சதவிகிதம் அதிகமாகும்.மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி தான் அதிக நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது. இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபலனாகவே,தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார். மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment