Thursday, 5 February 2015

பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் V.R.கிருஷ்ண அய்யர்…

 ''சட்டமன்றம், அமைச்சரவை, நீதித்துறை மூன்றிலும், பெருமை சேர்த்தவர்களில், வி. ஆர். கிருஷ்ண அய்யரை போல உலகில் யாருமில்லை'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ராமசுப்பிரமணியம் பேசினார்.
'நீதி நாயகம் சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை' சார்பில், மனித உரிமை, சமூக நீதிக்கு போராடியோருக்கு, விருது வழங்கும் விழா சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மறைந்த வி.ஆர். கிருஷ்ண அய்யர், மதுரை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவருமான நல்லகண்ணு ஆகியோருக்கு, நீதி நாயகம் சிவராஜ் வி.பாட்டீல் விருது வழங்கினார்.விழாவில், தலைமை உரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மறைந்த, வி.ஆர். கிருஷ்ண அய்யர், பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர். அவர் வாழ்ந்த போது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்து இருக்க வேண்டும். தகுதியில்லாத நபர் களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன. நல்லகண்ணு சிறந்த சமூக சேவகர், உண்மையான காந்தியவாதி. இவ்வாறு, அவர் பேசினார். சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதி, ராமசுப்பிர மணியம் பேசியதாவது: கிருஷ்ண அய்யர், நீதித்துறை, நிர்வாகம், ஆட்சி துறை ஆகிய மூன்றிலும், மக்களுக்காக தொண்டாற்றியவர். சட்டசபை, அமைச்சரவை, நீதித்துறை மூன்றிலும், அவரை போல் பெருமை சேர்த்தோர் வேறு யாருமில்லை. நல்லகண்ணு, சுதந்திர போராட்ட வீரர்; காந்தியவாதி. மக்கள் பிரச்னையை நினைத்து, ஒவ்வொரு நிமிடமும், வேதனைப்படு பவர். எளிமை என்பது, உள்ளுக்குள் தோன்றும் ஆன்ம பலம். அதை நல்லகண்ணுவிடம் காண முடியும். எளிமையை, இப்போதைய அரசியல் வாதிகள் இவரிடம் இருந்து தான், கற்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments: