விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சொளத்ரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் தினம் குறித்து தற்போது, விவசாயிகளிடமே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது.ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த 18-ம் நூற்றாண்டில், உலகின் வலுவான விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மிளிர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின் இந்திய விவசாயப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
பசுமைப் புரட்சி
1960-ல் இந்திய விவசாயம் கடும் வறட்சியைச் சந்தித்தது. உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. உணவு உற்பத்தியைப் பெருக்க, 1965-ல் பசுமைப் புரட்சி தொடங்கியது. ஆனாலும், இந்திய விவசாயிகளின் நிலைமை இன்றும் படுமோசமாகத்தான் உள்ளது.
கட்டுப்படியான விலை
கிரியேட் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலம் கூறுகையில், “விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது.விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள
புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும்” என்றார்.நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறுகையில், “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாயத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment