Sunday, 20 December 2015

தேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீடு பாதுகாப்போம்...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமை மதுரையில் தேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையேற்று உரையாற்றினார். இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பூ.சந்திரபோசு, மத்திய-மாநில எஸ்.சி. - எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.ராஜேந்திர சோழன், மத்திய-மாநில எஸ்.சி. - எஸ்.டி. அரசு ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.கருப்பையா, தீ..மு. மாநிலத் தலைவர் பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.- முதலாளித்துவத்தின் சுரண்டல் வேட்டைக்கு பட்டியல் இன மக்களை பலியாக்க விடோம்!தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரையில் டிசம்பர் 19 சனிக்கிழமை, தேவேந்திர குல வேளாளர் இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு, பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:பிராமணியமும், முதலாளித்துவமும் தேச வளர்ச்சிக்கு விரோதிகள் என்று சுட்டிக்காட்டினார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார். அந்த எதிரிகள் இன்று வரை வீழ்த்தப்படாததால் மிக ஆபத்தான நிலைகளை நாடு எதிர் கொண்டு வருகிறது.தேச விடுதலையின் போது இருந்த இந்திய முதலாளிகளின் சொத்து மதிப்புதற்போது பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது. செல்வச் செழிப்பு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் பக்கம் எந்த அளவிற்கு குவிந்து மேடாகி வருகிறதோ, அந்த அளவிற்கு மறுபுறத்தில் பற்றாக்குறை என்கிற பள்ளம் உருவாகியே தீரும். இந்திய மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தேச விடுதலை 67 ஆண்டுகளைக் கடந்த பின்பும் பற்றாக்குறையும், ஏழ்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உயிர் வாழ்க்கைக்காக மனித மாண்புகள் தொடர்ந்து சிதைக்கப் படுகிறது. `ஒரு வாக்கு ஒரு மதிப்புஎன்கிற அளவில் இந்திய மக்களிடையே அரசியல் சமத்துவம் ஏற்பட்டி ருந்தாலும், பொருளாதார தளத்தில் விடுதலையின் போதுஇருந்ததைவிட பல மடங்கு ஏற்றத் தாழ்வுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சாதியின் பெயரால் சமூகத்தில் வேரூன்றியுள்ள சமூக ஏற்றத் தாழ்வுகள் மீது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மிகக்கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலாளித்துவத்தின் சுரண்டல் வேட்டை
பெருவாரியான இந்திய மக்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கான முயற்சிகளில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்திய முதலாளித்துவம் மிக சாதுர்யமாக பிராமணியத்தையும் வளைத்து சேர்த்துக் கொண்டு மக்களிடையே நிலைபெற்றுள்ள சமூக முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி பெரும் சுரண்டல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கூர்மைப்படுத்தப்படும் முரண்பாடுகள், மேல் சாதிகள் என்று கற்பிக்கப்பட்டவர்களிடம் ஆதிக்க உணர்வாக குரூரமாக வெளிப்படுகிறது. மறுபுறத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் கல்வியின் விளைச்சலாக சமூக அநீதிகளுக்கு எதிரான விடுதலை உணர்வாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் மேலெழுகிறது.இவ்வாறு மேலெழுகிற ஜனநாயக உணர்வுகளை பாதுகாத்து, வளர்த்து, ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவரும் அரசியல் உறுதிப்பாடு இடதுசாரிகளை தவிர்த்து அரசியல் இயக்கங்களிடம் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகள் வேதனையளிக்கும் விதத்தில் தொடர்கிறது.
இடதுசாரிகளே பாதுகாப்பு
மாநில அரசுகளுக்கு தலைமையேற்கும் வாய்ப்புகள் இடதுசாரிகளுக்கு கிடைத்த மாநிலங்களில் பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிட்ட அளவுமாற்றம் அடைந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் நிலமற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் 9 லட்சம் ஏக்கர்நிலம் பட்டியல் இனத்தவருக்கே வழங்கப்பட்டது. தற்போது திரிபுரா மாநிலத்தில் கல்வி சராசரி 95 சதவீதம். ஆனால் அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவரின் கல்வி சராசரி 97 சதவீதம்.இத்தகைய பார்வையும் , பணியும் நிச்சயமாக இதர மாநிலங்களில் மேற்கொள்ளப்படவில்லை. பட்டியல் இனத்தவருக்கென்றே வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்களையும் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடும் முழு மனதாக செயல்படுத்தப்படவில்லை.
மத்திய அரசே மாநில அரசே.
மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பட்டியல் இனத்தவருக்கென பின்னடைவுப் காலிப்பணியிடங்களை உடனடியாக சிறப்பு பணித் தேர்வுகளின் மூலமாக நிரப்பிடு; குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள 26,000 பின்னடைவுக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு. சிறப்பு உட்கூறுத்திட்டம் என்கிறபட்டியல் இனத்தவருக்கான துணைத்திட்டத்தின் படி ஒதுக்கீடு செய்யப்படுகிற முழு தொகையினையும், மடைமாற்றம் செய்திடாமல் முழுமையாக சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திடு. மத்திய அரசு கடந்த ஆண்டின் நிதிஒதுக்கீட்டில் பாதியாக குறைத்ததை இம்மாநாடு கண்டிக்கிறது. தற்போது தமிழகத்தில் 138 ஆதிதிராவிடர் கல்லுhரி விடுதிகள் செயல்படுகின்றன. இதனை இரட்டிப்பாக உயர்த்திடு. .டி.. விடுதிகள் தற்போது 17 ஆகவும், பாலிடெக்னிக் விடுதிகள் 3ஆகவும்முதுகலைப் பட்டதாரி விடுதிகள்12 ஆகவும்உள்ளன. இதனை மாவட்டத்திற்கு ஒன்று எனவிரிவுபடுத்து. சட்டக்கல்லுhரி விடுதிஒன்றுதான் உள்ளது. சட்டக்கல்லுhரி உள்ள அனைத்து இடங்களிலும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைத் துவக்கிடு. வெளிநாடு சென்று படிப்பதற்கு 2014-2015 ஆம் ஆண்டில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு ரூ. 23.28 லட்சம் நிதி உதவியுடன் படித்து வருகிறார். இதனை ஆண்டுக்கு 25 மாணவர்கள் என இலக்கு வைத்து வெளிநாட்டு படிப்பிற்கு கல்வி உதவி செய்திடு.சட்டப் பட்டதாரிகளுக்கு புத்தகம்மற்றும் அறை வாடகைக்காக வழங்கப்படுகிற ரூ.50 ஆயிரத்தை பட்டியல் இனத்தில் உள்ள அனைத்து சட்டப் பட்டதாரிகளுக்கும் வழங்கிடு. அரசாணை 92ன் படியான +2 விற்கு பிந்தைய கல்விக் கட்டணம் மற்றும்  குரூப் 1 தேர்வுகளுக்கான உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தை விண்ணப்பித்துள்ள அனைத்து பட்டியல் இன மாணவர்களுக்கும் வழங்கு. உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல்தமிழகத்தில் துணைத் திட்டத்தில் பட்டியல் இன மாணவர்களுக்கான 4 மருத்துவக் கல்லுhரிகளைத் துவங்கிடு. தொகுப்பு வீடுகள், தாட்கோ கடனுதவி, நிலமற்றவர்களுக்கு நில ஒதுக்கீடு,  தொழில் வளாகங்களில் 20 சதவீத ஒதுக்கீடு மற்றும்அனைத்து ஒப்பந்தங்களிலும் 20 சதவீத வழங்கிடு என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீடு காப்போம்
நிகழ்காலத்தில் சமூகம் சமத்துவமாக இல்லாத போது அசமத்துவ ஏற்பாடுகளின் மூலமாக எதிர் காலத்தில் சமத்துவ சமூகம் படைக்க முடியும். அதன் பெயரே இட ஒதுக்கீடும். சிறப்புத் திட்டங்களும்.இத்தகைய புரிதல்களோடு சாதிய சமூகத்தின் வஞ்சனையால், நிலத்தையும், வாழ்வுரிமையையும் இழந்த தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பட்டியல் இனமக்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்களை முன்னைக்காட்டிலும் வீரியத்துடன் கோரிப் பெற இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. சாதியின் பெயரால் இழிவாக அழைக்கப்படும் நிலையில் மாற்றம் காண பள்ளர், பண்ணாடி, குடும்பன், காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் ஆகிய உட்பிரிவு மக்கள் தங்கள் `தேவேந்திர குலவேளாளர்என உரிய கௌரவத்துடன்அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு முழுமனதாக அங்கீகரித்தது.

No comments: