Wednesday 23 December 2015

இன்று திரு .கக்கன், அவர்கள் நினைவு நாள்...(டிசம்பர் 23) . . .

பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் மதுரை வந்த அவர், தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். (அந்த விடுதியே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான்.) ஆனால் அங்கு வேறு அதிகாரி யாரோ தங்கியிருந்தார்கள். இதையறிந்த கக்கனுடன் வந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது. தனியார் விடுதிக்குச் செல்லலாம் என்றார்கள் உடனிருந்த அதிகாரிகள். பயணியர்விடுதி கண்காணிப்பாளருக்கோ பதற்றம். "தங்கியிருப்பவரை எழுப்பி விடுகிறேன்" என்றார். ஆனால் கக்கன், "வேண்டாம். அதிகார நடைமுறைப்படி அமைச்சருக்கு தான் இங்கு முன்னுரிமை என்றாலும் இங்கு தங்கியிருப்பவரும் நம்மைப் போன்றவர் தான். தூக்கத்தில் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்" எனக் கூறிவிட்டு மதுரையிலுள்ள ஒரே அறை கொண்ட தனது தம்பி வீட்டிற்குச் சென்று இரவு தங்கினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இதே விடுதியில் தங்கிய அமைச்சர் ஒருவர், தனக்கு சுடசுட தோசை வாங்கிவராத தாசில்தார் மீது தோசையை தூக்கியெறிந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அமைச்சராக இருந்த போது அலுவலகத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் கக்கன். கார் வீட்டுக்குள் நுழையும் அந்த வினாடியில் தனது பணியாளர் ஒரு கேனைத் தூக்கி வருவதைப் பார்த்தார். அவரிடம் என்ன என்று கேட்க "அம்மா மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னார்கள். அது தான் இது.." என்றார். உடனே காரை நிறுத்தியதோடு கேனையும் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வைக்கச் சொன்னார். டிரைவரை அனுப்பி வீட்டுக்குள் இருந்து மனைவியை வெளியே வரச்சொல்லி " இந்த மண்ணெண்ணெயை வாங்கி வந்திருப்பவர் யார் தெரியுமா? அவர் அரசு ஊழியர். எனக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டவர். அவரை உனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.." என கடுமையாகச் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்திலிருந்த வர்களெல்லாம் பார்த்தார்கள். அழுதுகொண்டே வீட்டுற்குள் சென்றார் கக்கனின் மனைவி. சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு பின்னர் வீட்டுக்குள் நுழைந்தார் கக்கன்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

திரு கக்கன் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்