Saturday 27 February 2016

போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி போதாது ஏ.லாசர் எம்எல்ஏ பேட்டி...

போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கியது போதாது; அதிக நிதி ஒதுக்க வேண்டுமென போராட்டக்குழு தலைவர் .லாசர் எம்எல்ஏ வலியுறுத்தி யுள்ளார்.போடி -மதுரை, திண்டுக்கல் - லோயர்கேம்ப் அகல ரயில் பாதைதிட்ட அமலாக்கக் குழுவின் கூட்டம் தேனியில் கமிட்டி தலைவர் .லாசர்எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பி.சி.ராஜேந்திரன், எம்.எம்.ஆனந்தவேல், கே.சீனிவாசன், பி.ராமமூர்த்தி, எல்.ஆர்.சங்கரசுப்பு, டி.வெங்கடேசன், கே.ராஜப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்ட முடிவுகள் குறித்து .லாசர் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய ரயில்வே பட்ஜெட்டில் போடி -–மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடியும், திண்டுக்கல் -குமுளி அகல ரயில் திட்ட ஆய்வுப்பணிக்கு ரூ.30 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் சற்று கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏற்கத்தக்கதல்ல. கடந்த 2010ல் போடி -–மதுரை ரயில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள்நடைபெறவில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பு வெறும் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது தேனி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015-ல் அகல ரயில்பாதை திட்டப் பணி முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு வரை தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கினால் 20 ஆண்டுகளானாலும் இப்பணி நிறைவேறாது. மத்திய அரசு திட்ட மதிப்பீடான ரூ.300 கோடியை இரண்டே தவணையில் (2016-17, 2017-18) நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டப் பணிகளை 2017ம்ஆண்டில் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அமலாக்கக்குழுவின் நோக்கமாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆய்வு நிலையிலேயே உள்ள திண்டுக்கல் - குமுளி ரயில்திட்ட ஆய்வுப் பணிக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளனர். எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இக்கூட்டத்தொடர் முடியும் முன் இத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது. எனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10 முதல் 15ம் தேதிக்குள் தேனி மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டிசிறப்பு மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இக்குழுவின் சார்பில் பிரதமர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து ரயில்வேதிட்டங்களை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதுபோல புதிய திட்டங்களுக்கு மாநில அரசு தனது பங்கு நிதியை ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இத்திட்டங்களை நிறைவேற்றதமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமலாக்கக்குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்தியதாக எந்த தகவலும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் தெரிவித்தது போல போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ஒரேதவணையில் நிதி ஒதுக்கி திட்டத்தைநிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்

No comments: