தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் 3776 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை நேரமையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் கமிஷன் முழுவீச்சில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நாளை பதிவாகும் ஓட்டுக்கள் மே 19ம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டசபைக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 29ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மே 2ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. மே 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனல் பறந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று (மே 14) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையிலும், புகார் வரும் பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று வரை ரூ.102 கோடி பிடிபட்டுள்ளதாகவும், பணம் பட்டுவாடா செய்ததாக 3 நாட்களில் 101 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் நாளை ஓட்டளிக்க உள்ளனர். 2.88 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 21.05 லட்சம் பேர் முதல் முறையாகவும், திருநங்கைகள் 4720 பேரும் ஓட்டளிக்க உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே மே 16க்கும் பதிலாக மே 23ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் 233 தொகுதிகளுக்கு மட்டும் நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
தேர்தலில் 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,961 வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 1,233 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4.75 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புக்காக சுமார் 30,000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30
சட்டசபை தொகுதிகளில்
9.43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள
140 சட்டசபை தொகுதிகளில்
2.61 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அங்கு 109 பெண்கள் உள்பட 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
No comments:
Post a Comment