Sunday 2 March 2014

கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வீடு திரும்பி செல்வதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று போலீசார் கடும் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளனர்.
பெண் என்ஜினீயர் கொலை
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் போலீஸ் சரகத்தில் உள்ள சிறுசேரியில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்காள மாநில கட்டிட தொழிலாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி இரவில் வேலை முடிந்து வீடு திரும்பி செல்லும்போது இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று, போலீசார் கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து உள்ளனர்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விபரம் பின்வருமாறு:–
வாகன வசதிகள்
* இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வீடு திரும்பி செல்வதற்கு உரிய வாகன வசதியை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களே செய்து கொடுக்க வேண்டும்.
* பெண் ஊழியர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும் வாகனங்களில் பெண் பாதுகாவலர்களையும் உடன் அனுப்ப வேண்டும்.
* குறிப்பிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும், அவர்களது முகவரி, புகைப்படத்துடன் கூடிய விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
* அவர்களது நன்னடத்தை பற்றி உரிய போலீஸ் சான்றிதழும் பெற்று வைத்திருக்க வேண்டும்.
* பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு, அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் வீடு திரும்பி செல்லும் வரை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டு.
*கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் காவலாளிகளோடு சேர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோந்துக்கான ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் நிறுவனங்களே செய்ய வேண்டும்.
*எல்லா கம்ப்யூட்டர் நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.

No comments: