சர்வதேச மகளிர்தினத்தை, நமது ஊரில் மத்திய-மாநிலஅரசுகளில் பணியாற்றும் பெண்ஊழியர்கள் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.புதுக்கோட்டைத் தொலைத்தொடர்பு ஊழியர்களின் சார்பில் அதன் மகளிர் குழுவினர், “சர்வதேச மகளிர்தின வாழ்த்து அட்டை“ களை ரோஜாப்பூவுடன் தந்து, புதுக்கோட்டை நகரில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களைச் சந்தித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது.தொலைத் தொடர்பு ஊழியர்களின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு திருச்சிக் கோட்ட அமைப்பாளர் மு.மல்லிகா தலைமையில், சீதாலட்சுமி, யாஸ்மின், மகேஸ்வரி, மரகதம், பூம்பாவை, லோகேஸ்வரி முதலான பெண் ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் பணியாற்றும் கண்ணம்மாள், தலைமை அஞ்சலகத்தைச் சேர்ந்த பெண்ஊழியர்களான அழகுராணி, ராஜலட்சுமி, சித்ரா உள்ளிட்டவர்களை அவரவர் அலுவலகத்திற்குச் சென்று, நேரில் சந்தித்து மகளிர்தின வாழ்த்துகளைத் தெரிவித்து, வாழ்த்து அட்டைகளுடன் ரோஜா மலரையும் வழங்கி மகிழ்ந்தனர்.வரும் காலங்களில், மத்திய-மாநில அரசுகளின் கீழ்ப் பணியாற்றும் பெண்கள் தமது அலுவலகப் பணிகள் தாண்டியும் பெண்களுக்கான பொதுவான கோரிக்கைகளில் இணைந்து செயல்படுவதென்றும் தீர்மானித்தனர். சமூகத்தின் ஆணாதிக்கம், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு பற்றிய கவலைகளைப் பகிர்ந்துகொண்டதோடு, சமூக விஷயங்களில் அக்கறை காட்டும் ஆண்களின் உதவியோடு தொடர்ந்து முன்னேறவும் சபதமேற்றனர்.தொலைத்தொடர்பு ஊழியர்சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், நடராஜன், ராஜேந்திரன் ஆகியோருடன், ஆயுள் காப்பீட்டுக் கழக, மற்றும் அஞ்சலக ஊழியர் சங்க நிர்வாகிகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment