Sunday 23 March 2014

தொடர வேண்டுமா இந்த வளர்ச்சி ?. . .

2014 மக்களவைத் தேர்தல்கள் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், காங்கிரசும், பிஜேபியும் கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சி குறித்து போட்டி போட்டு விவாதித்து வருகின்றன
கிடைத்ததும், கிடைக்காததும்
உண்மை நிலையிலிருந்து BJP & CONG  எவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறார்கள் என்பதை, மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் ஆய்வறிக்கைத் தகவல்கள் தோலுரித்துக் காட்டுகின்றன. வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களிக்கும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம்மற்றும் அடிப்படை சேவைகளை பயன்படுத்த அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புக்களின் அடிப்படையில் இந்த அறிக்கைஅமைந்துள்ளது. அவர்கள் பொருளாதார ரீதியாக எந்த அளவிற்கு ஆளுமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் எந்த அளவிற்கு அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்என்பதன் அடிப்படையில் அமைந்த ஆய்வு இது.
சராசரி இந்தியன்
2011-2012ல் சராசரி இந்தியனின் நிலைமை என்ன? “உணவு, எரிசக்தி, உறைவிடம், குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி, சமூகப் பாதுகாப்புஎன்ற  8 அடிப்படைத் தேவைகளின்படி பார்த்தால், இந்திய மக்கள்தொகையில் 56 சதவீத மக்களுக்கு இவைமுழுமையாகக் கிடைப்பதில்லை என்பதேஉண்மை. “68 கோடி மக்கள் - அதாவது,வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு அதிகமானவர்கள் கண்ணியம், குறைந்தபட்ச வசதி, பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையின் ஒரு சிறு துளியையாவது அனுபவித்து விட வேண்டும் என, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடி வருகின்றனர்என அந்த அறிக்கை கூறுகிறது.
சுருங்கும் வருமானம்
கடந்த நூற்றாண்டில், 1980ம் ஆண்டு வரையிலும் கூட வேலை வாய்ப்புக்கள் அதிகரித்து வந்தன. ஆனால், இன்று பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், உற்பத்தித் திறனை பல மடங்கு பெருக்கியிருக்கிறது. மறுபுறத்தில் வேலை வாய்ப்புக்களை சுருக்கிவிட்டது. இதன் காரணமாக வருமான ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்திய நாட்டின் நிலைமை மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டது. முறைசாரா தொழிலாளர் எண்ணிக்கை இந்தக் காலத்தில் பெருகியிருக்கிறது. 1995ம் ஆண்டில் 13 ஆக இருந்த முறைசாராத் தொழிலாளர் சதவீதம், 2011ம் ஆண்டில் 34 ஆக உயர்ந்திருக்கிறது. 2005ம் ஆண்டில் வேலை பங்களிப்பில் 29ஆக இருந்த பெண் தொழிலாளர்களின் சதவீதம், 2011-12ல் 22 ஆகக் குறைந்து விட்டது.வேலைகளில் முறைசாராத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க தொழிற்சங்கங்களின் பலமும், தொழிலாளர்களின் பேர சக்தியும் குறைந்து கொண்டே செல்கின்றன. இது முதலாளிகளுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. முதலாளிகளுக்கு சாதகம் எனில், இயல்பாக அது தொழிலாளிகளுக்கு பாதகமாகத்தானே இருக்க முடியும்! ஆம். 1980களில் உற்பத்திக் கூடுதல் மதிப்பில் 30 சதவீதமாக இருந்த கூலியின் பங்கு 2009-10ம் ஆண்டில் 11.6 சதவீதமாகக் குறைந்து விட்டது.
ஒற்றை அம்ச வளர்ச்சி
மறுபுறத்தில் முதலாளிகளின் லாபம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2004-05 விலைவாசிகளின் அடிப்படையில்  ஆய்வுசெய்தால், சராசரியாக ஒரு தொழிலாளி செய்யும் கூடுதல் உற்பத்தி மதிப்பு, 1981ல் ரூ.1 லட்சம் என்றால், கடந்த 30 ஆண்டுகளில் அதுரூ.5 லட்சமாக - அதாவது ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வில் நான்கில் மூன்று பகுதி நவீன தாராளவாதக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட 1990 களுக்குப் பின்னர் வந்ததே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, முதலாளிகளின் லாபம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கூடுதல் மதிப்பில் 2001-02ல் 24.2 ஆக இருந்த முதலாளிகளின் லாப சதவீதம், 2007-08ல் 61.8 வரை எகிறியது. 2010ம் ஆண்டில், இந்திய மக்களின் குடும்ப வருமானத்தில் 42.8 சதவீதம் 20 சதவீத உயர்தட்டு மக்களின் கைகளில் இருக்கிறது எனவும், அதே போன்று, அடிமட்ட 20 சதவீத மக்கள் கைகளில் 8.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது எனவும் உலக வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வளர்ச்சி யாருக்கு உதவியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? மொத்தத்தில் இவை எல்லாம் முதலாளிகளின் லாபம் மற்றும் மேல்தட்டு செல்வந்தர்களின் நலன்கள் என்ற ஒற்றை அம்சத்தை உள்ளடக்கிய வளர்ச்சியேயாகும்.
தொடர வேண்டுமா?
முதலாளிகளுக்கும், மேல்தட்டு செல்வந்தர்களுக்கும் மட்டுமே சாதகமான இத்தகைய நிலைமையினைத்தான்வளர்ச்சிஎன காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கூறுகின்றன. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டில் அமலான நவீன தாராளவாதக் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் நிலைமைகளே இவை. இக்கொள்கைகள் குறித்து இரு கட்சியினருக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை.அத்தகைய கொள்கைகள் மூலமே வளர்ச்சியினை தொடர முடியும் என்று இவர்கள் மக்களிடம் பேசி வருகின்றனர். இது தான் வளர்ச்சி என்றால், இது தொடர வேண்டுமா என்பது இடதுசாரிக் கட்சிகள் மக்கள் முன் நிறுத்தியிருக்கும் மிகப் பெரிய கேள்வி. அத்துடன், மக்களின் வாழ்நிலையில் உண்மையான மாற்றத்தினை உருவாக்கும் வகையில் இடதுசாரிகள் முன் வைத்திருக்கும் மாற்றுக் கொள்கைகளை, நேர்மையாகச் சிந்திக்கும் எவராலும் நிராகரிக்க முடியாது.

No comments: