ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அன்னை தெரசா வளாகத்தில் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 7 வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சட்டம் ஒழுங்கின் நிலை மற்றும் மின்னணு ஓட்டு எந்திரம், வாக்குச்சாவடிகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.தமிழகத்தில் தற்போது 60ஆயிரத்து418 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
விழிப்புணர்வு
தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு பறக்கும் படை அமைத்துள்ளோம். ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். சினிமா, பேனர் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால் தொகுதிக்கு சாலை வேண்டும், வேறு வசதிகள் வேண்டும் என்று எம்.பி.யிடம் உரிமையோடு கேட்க முடியாது. ஓட்டுக்குத்தான் பணம் கொடுத்துவிட்டேனே என்று அவர் மறுத்துவிடுவார். எனவே 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.ஆயிரம் ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் ஓட்டை விற்கவேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
ஒரு ஆண்டு ஜெயில்
அதோடு, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவதை வீடியோ படம் அல்லது புகைப்படம் படம் பிடித்து அனுப்பும் வசதிகளை இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். எனவே அவற்றை இந்த குற்றத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது படங்கள் மூலமாக ஆதாரங்கள் பெறப்படும்.
தேர்தல் விளம்பரத்துக்கான சட்டம்
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எவை என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசீலித்து வருகின்றனர். தேர்தல் விளம்பரங்கள் குறித்து ஏற்கனவே மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன.பொது இடங்கள், தனியார் இடங்கள், கிராமப் பகுதிகளில் எப்படி தேர்தல் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்பதுபற்றிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவோம்.
கட்சி சின்னங்கள்
தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படுமா? என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். ஆனால் இங்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் இருந்தால் அவற்றை மறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment