Friday, 28 March 2014

இலங்கை தீர்மானம் :- இந்தியா புறக்கணித்தது சரியல்ல!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு பதிலாக, இலங்கை அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடந்த போது, அதை இந்திய அரசு புறக்கணித்தது சரியான அணுகுமுறை அல்ல.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆயினும், இலங்கைத் தமிழர்களின் சொல்லொணாத்துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிகாரப்பரவல் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைஎன்றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தியிருப்பது, தமிழர் பகுதிகளை இன்னும் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது ஆகியவை தொடர்கின்றன.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், இலங்கை ராணுவனத்தினருக்கும் இடையிலான யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரித்து குற்றமிழைத் தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை எழுந்தது..நா. மனித உரிமை ஆணையத்தில் 2012ம் ஆண்டும், 2013ம் ஆண்டும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்திட வேண்டுமெனவும், அதிகாரப் பரவல் அளித்திடவேண்டுமென்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம்அமலாக்கவில்லை.
இப்பின்னணியில்வியாழனன்று (27.3.2014 மனித உரிமைஆணையத்தில் முன்மொழியப்பட்டதீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரித்திருக்க வேண்டும் அல்லது மற்ற நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் இந்தியாவுக்கு ஏற்புடையது இல்லை என்றால், அதில் சில திருத்தங்களோடு இந்திய அரசாங்கமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டியிருக்க வேண்டும். மாறாக, இந்திய அரசாங்கம் புறக்கணித்தது என்பது சரியான அணுகுமுறையல்ல.
மேலும், தற்போது இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயல்பாகவே பெரும்பான்மை பலம் இல்லாத அரசே ஆகும். அப்படிப்பட்ட நிலையில், இதுபோன்ற கொள்கைப்பூர்வமான முடிவை தானாகவே மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மாறாக, இப்பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

No comments: