Monday 23 February 2015

துறைமுகம்-மார்ச் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

சென்னை துறைமுகத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கங்கள் வரும் 9ம் தேதி  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  துறைமுக நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். பழமை வாய்ந்த  துறைமுகமான சென்னை துறைமுகம் தற்போது நிதி மற்றும் இடநெருக்கடி காரணமாக சமீபகாலமாக சரிவை நோக்கி செல்கிறது. பல வளர்ச்சி திட்டங்கள்  முடங்கி கிடப்பதால், சில ஆண்டுகளாக சரக்கு கையாளும் திறன் குறைந்து கொண்டே வருகிறது. 2012-13ல் 53.40 மி.டன்னாக இருந்த சரக்கு கையாண்ட அளவு,  2013-14ல் 51.10 மி.டன்னாக சரிந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை சுமார் 49 மி.டன் சரக்கு கையாளப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.இதுபோன்ற காரணங்களால்  துறைமுகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதை காரணம் காட்டி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக  புகார் எழுந்துள்ளதுஇந்நிலையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான  அதிகாரப்பூர்வ நடவடிக்கை தற்போது தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை துறைமுக ஊழியர்கள் கூறியதாவது: துறைமுக நிதி  நெருக்கடியை காரணம் காட்டி ஏற்கனவே தொழிலாளர்களின் பல சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. நீண்ட கால பிரச்னையான போக்குவரத்து நெருக்கடியை  சமாளிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால் பல நல்ல திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் பல நிறுவனங்கள்  அருகில் உள்ள பிற தனியார் மற்றும் அரசு துறைமுகங்களை நாடி செல்கின்றனர். இதனால் கப்பல்களின் வரவு குறைந்து வருவாய் பாதிக்கிறது. ஏற்கனவே  நிலக்கரி இறக்குமதி தடையால் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை காரணம் காட்டி, துறைமுக நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வரப்படுகிறது. இதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். வரும் ஏப்ரல்-மே மாதங்களுக்குள் அனுமதி வாங்க  தீவிரமாக உள்ளனர். துறைமுகத்தை மேம்படுத்தவே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக அமைச்சர் தெரிவிக்கிறார். தற்போதுள்ள பிரச்னைகளை  சரிசெய்து கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே துறைமுகத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லலாம். தனியார்மயமானால் தொழிலாளிகள் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள்.இதை கண்டித்து மார்ச் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சென்னை போல் அனைத்து துறைமுகங்களையும் தனியார்மயமாக்க  முடிவெடுத்துள்ளனர். எனவே துறைமுகங்களை தனியார்மயமாக்க முயற்சித்தால் தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவில் நாடு  தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றனர். சென்னை துறைமுகத்தில் 4,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கச்சா எண்ணெய், கிரானைட் கற்கள், ரப்பர்கார், உரம் மற்றும் வேதி பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகளவில் நடக்கிறது. சராசரியாக 14 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.600 கோடி வருவாய்அம்பேத்கர், ஜவகர், பாரதி ஆகிய மூன்று கப்பல் நிறுத்தும் தளங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. நாள்தோறும்  சராசரியாக 25 முதல் 30 கப்பல்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்கு 60 மி.டன் வரை சரக்கு கையாளும் திறன் கொண்டது.

No comments: