பொதுப் போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கும் திட்டத்துடனும், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சாலை விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில், மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவிற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனொரு பகுதியாக, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் வியாழனன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 43 தொழிற் சங்கங்கள் பங்கேற்கின்றன.தமிழகத்தில் தொ.மு.ச, திராவிட தொழிற் சங்க பேரவை, எம்.எல்.எப்., விடுதலை தொழிலாளர் முன்னணி, பட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும், தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் ஆட்டோக்களும், சென்னையில் மட்டும் 72 ஆயிரம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக், அபே ஆட்டோக்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய சட்டம் தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களின் உரிமையை பாதிப்பதாகவும் உள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தத்தையொட்டி, தனியார் பேருந்து ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிய உள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறியுள்ளார்.
பொதுமக்கள் நலனை தனியாருக்கு காவு கொடுக்கும் சட்டம்
பாஜக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஏற்கெனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவர்கள் (இருசக்கர வாகனங்களுக்கு உட்பட) மறுபடியும் உரிமம் பெற வேண்டும்; எல்எல்ஆர் பெற்றபின் 9 மாதங்களுக்குப் பின்னர்தான் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும்;எல்.எல்.ஆர் எடுப்பதற்கு ஒருமுறையும், ஓட்டுநர் உரிமத்திற்கு ஒருமுறையும் மொத்தம் 2 முறை தேர்வு எழுத வேண்டும்; இந்த தேர்வுகளை தனியார் நிறுவனங்கள்தான் நடத்தும்; அவர்கள்தான் உரிமங்களையும் வழங்குவார்கள்; மோட்டார் சைக்கிள் உட்பட எந்தவொரு வாகனமாக இருந்தாலும், அதில் சிறிய சாதாரண பழுது ஏற்பட்டால்கூட, குறிப்பிட்ட தனியார் கம்பெனியில்தான் சர்வீஸுக்கு விட வேண்டும்;குறிப்பிட்ட தனியார் கம்பெனிகளின் உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மீறுவோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்; மேலும் விபத்து ஏற்பட்டால் ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் அபராதம், 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல அரசுப் போக்குவரத்தே இருக்கக்கூடாது; அனைத்தும் தனியாருக்குக் கொடுக்கப்பட வேண்டும்;தற்போது தேசியமயமாக உள்ள பேருந்து பெர்மிட்டுகள் அனைத்தும், புதிய சட்டத்தின் மூலம் தேசிய ஆணையத் தின் கைக்குப் போய்விடும்; அவர்கள் பெர்மிட்களை எடுக்க உலகளாவிய அளவில் டெண்டர் விடுவார்கள்.