Thursday 9 April 2015

மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டுவதா ? - பி.கற்பகம்.

நமது நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றைய சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவாக, புறந்தள்ளக் கூடியவர்களாக பார்க்கும் நிலை தொடர்வதை என்னவென்று சொல்வது? இந்தியா மக்கள் தொகையில் 9 கோடியே 6 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்என்று புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள்.இந்தியாவில், தமிழகத்தில், அது கூட வேண்டாம், நமது ஊரில், நமது தெருவில், நமது வீட்டு பக்கத்து வீட்டில் மாற்றுத் திறனாளிகளை பார்க்கும்போது இவர்கள் ஏன் பிறந்தார்கள்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை, அது தான் இந்தஜென்மத்தில் இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறந்திருக்கிறார்கள் என சில அதிமேதாவிகள் பேசுவதுண்டு.சில மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தாலேயே புறக்கணிக்கப் படுகிறார்கள். சில சமயங்களில் கொடிய வாழ்க்கையையும் பார்க்கமுடிகிறது. மாற்றுத் திறனாளிகளாக பிறந்துவிட்ட இவர்களை, வாழ்க்கையை சவாலாக ஏற்றுக் கொண்டு வாழும் இவர்களை சமூகம் மட்டுமல்ல, அரசும் முழு அக்கறை காட்டி செயல்படவில்லை.குறிப்பாக பேருந்துகளில் தனி இருக்கை, ரயில்களில் தனிப்பெட்டி என்று போராடி பெற்ற சலுகைகளைக் கூட உடல்வாகு நன்றாக இருப்பவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அடாவடித்தனம் செய்கிற மனிதர்களும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற மாணவ,மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில், அவர்களுக்கான இருக்கைகள், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் அரசு கால தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போல, இன்றைய சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தில்லியில் நிர்பயா தொடங்கி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,கடலூர், குமரி இது போன்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றில் இன்றைய சமூகத்தில் கழுகுக் கண்கள் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வாரி வாரி இறைத்து வருவதாகவும், மாற்றுத் திறனாளிகளே நாட்டில்இல்லை என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், பட்டபடிப்பு முடித்திருந்தால் திருமண உதவி தொகையாக ரூ. 50,000மும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. கை அல்லது கால் இழந்தவர்களுக்கு நவீன செயற்கை கருவி ரூ. 70 லட்சம் செலவில் வழங்க வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. பிள்ளையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்குவதற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியிருப்பதாக அரசு ஆணையில் உள்ளது.அதே போன்று, எவ்வித ஆதரவுமின்றி இருக்கக்கூடிய அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும், மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பத்திரிகை விளம்பரம் என்ன? டிவி செய்திகள் என்ன? ஒளிரும் பதாகைகள் என்ன? சுவரொட்டிகள் என்ன?எல்லாமே இருக்கிறது.ஆனால், மாற்றுத் திறனாளிக்கு 40 சதம் ஊனமா? தலாக், தலாக், 50 சதம் ஊனமா? கிடையவே கிடையாது. 60 சதம் ஊனமா? கொடுக்கவே கொடுக்கக்கூடாது என்ற நிலைதான் உண்மை. உடல் உறுப்புகளில் ஏதாவது ஒரு பாகம்குறைபட்டு இருந்தாலே அதற்கு பெயர் ஊனம் தான். பாரபட்சமின்றி காலம் தாழ்த்தாமல் ஓட்டு கேட்டு வரும் போது பார்க்காத ஒருவிஷயத்தை உதவித் தொகை வழங்கும்போது மட்டும் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? உடல்வாகு நன்றாக உள்ளவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, போன்றவை பல்வேறு சலுகைகளை வழங்கும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக உதவி செய்ய முன்வர வேண்டும். ஈவுஇரக்கம் இல்லாமல் மாதாந்திர உதவித்தொகை பல மாதங்களாக கொடுக்காமல்நிறுத்தி வைப்பது, காரணம் கேட்டால்அரசு கஜானாவில் பணம் இல்லை என்றுபதில் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும் உங்க வீட்டில் செல்போன், பிரிட்ஜ், டிவி, பீரோ இருந்தால் டிவி கிடையாது; ரூ. 1000 லஞ்சம் கொடுத்தால் உடனடியாக உதவித் தொகை கிடைக்கும் என்றநிலை.இத்தகைய பின்னணியில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, பசுமை வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை, அரசு பணியிடங்களில் முன்னுரிமை, மொத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், சலுகைகளைப்பெற தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் உரிமைகளுக்கான சங்கம். இந்த சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சமின்றி காலம் தாழர்த்தாமல் ரூ.3000 உதவித் தொகையை மாதந்தோறும் வழங்கிட வேண்டும். சமூகப் பாதுகாப்பு சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும். அமலாக்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கிட வேண்டும். காதுகேளாதவர்களுக்கு 80 சதம் ஊனமிருந்தால் தான் உதவித் தொகை வழங்கப்படும் என்ற பாரபட்சத்தை ரத்து செய்ய வேண்டும். வேலை வாய்ப்பில், கல்வியில், சம அந்தஸ்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றுபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் நெல்லை மாவட்ட 3-வது மாநாடு வருகிறஏப்ரல் 12ம் தேதிசேரன்மகாதேவியில் மாபெரும்பேரணியுடன், சிலம்பாட்டம், வாணவேடிக்கை நிகழ்வுகளோடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் சங்க அகில இந்தியத் தலைவர் பா. ஜான்சி ராணி, மாவட்டத் தலைவர் பி. தியாகராஜன், செயலாளர் எஸ். குமாரசாமி, பொருளாளர் . காசி மற்றும் வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ். கே. பழனிச்சாமி, சேரன் மகாதேவி பேரூராட்சி மன்றத் தலைவர் இசக்கிப் பாண்டியன், தூயகம் முதியோர் இல்லம் நிறுவனர் செல்வி எஸ். ஹெலன் மேரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நெல்லை மாவட்டம் முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாதுகாவலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை களை வென்றெடுக்க வாரீர்!

No comments: