நேபாளத்தில் சனிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 1,500 பேர் பலியாகினர். கட்டட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. இதன் பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.நிலநடுக்கத்தில் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 1,500 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்டடங்களின் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.நேபாளத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கியச் சாலைகள் நிலநடுக்கம் காரணமாக பிளவுபட்டு, பெரும் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.சீர்குலைந்த தலைநகரம்: நேபாளத் தலைநகர் காத்மாண்டை நிலநடுக்கம் புரட்டிப் போட்டுள்ளது. நகரில் இருந்த பல கட்டடங்களும், புராதனக் கோயில்களும், வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள மூன்றாம் நூற்றாண்டு கால தர்பார் சதுக்க அரண்மனை முழுவதும் இடிந்து தரைமட்டானது. அக்காலத்தில் நேபாள பேரரசர்களின் ஆட்சிபீடமாக விளங்கிய இந்த அரண்மனை, உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டதாகும்.
கட்டட இடிபாட்டிலிருந்து 200 உடல்கள் மீட்பு: காத்மாண்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த தரஹரா கோபுரக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அதனை சுற்றிப்பார்க்கச் சென்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இடிபாடுகளிலிருந்து இதுவரை 200 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். நேபாளத்தின் கோக்ரா, காஸ்கி, லாம்ஜங், சியாங்ஜா, தனாஹுன், மனாங், குல்மி ஆகிய மாவட்டங்கள், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.மீட்புப் பணிகள் தீவிரம்: நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்துள்ளதால், அவற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் பணியில் நேபாள ராணுவத்தினர், போலீஸார், பாதுகாப்புப் படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அதிக அளவில் இருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன.நேபாள அரசு வேண்டுகோள்: இதுகுறித்து, அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மைனேந்திர ரிஜால் கூறியதாவது: நேபாளம் மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக நாடே இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் அளவுக்கு போதிய ஆள்களோ, கருவிகளோ எங்களிடம் இல்லை.எனவே, மீட்புப் பணியில் மற்ற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. மீட்புப் பணியில் சிறந்த அனுபவமுள்ள சர்வதேச நிறுவனங்களும் நேபாளத்துக்கு உதவ முன்வர வேண்டும் என ரிஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியர்கள் இருவர் பலி: நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரகக் கட்டடச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில், அங்கு பணிபுரியும் ஊழியரின் மகள் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஓர் இந்தியரும் உயிரிழந்தார்.
""நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக +977 98511 07021, +977 985111 35141 ஆகிய உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன'' என இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் அபய் குமார் தெரிவித்தார்.எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு: நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக நேபாளத்தின் எல்லையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. எவரெஸ்ட் சிகரம் ஏறும் வீரர்களின் முகாமை பனிச்சரிவு மூடியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், அதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.அண்டை நாடுகளில்...: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்துக்கு 44 பேர் பலியாகினர்.சீனாவின் திபெத் பகுதியில் உள்ள ஷிகாத்சே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 83 வயது மூதாட்டி உள்பட 12 பேர் பலியாகினர். வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்நாட்டுத் தலைநகர் டாக்காவில் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 40 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அந்நாட்டில் உள்ள சில கட்டடங்களும் இடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரிட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.--தினமணி.
No comments:
Post a Comment