Saturday, 18 April 2015

கதவைத் திற…ஊழல் வரட்டும்...!

இந்திய அரசின் மிகப் பெரும் செலவினங்களில் ஒன்று பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்கள் வாங்குவது ஆகும். காங்கிரஸ் ஆட்சியின் போது ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பரபரப்பை உண்டாக்கின.2015-16 பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக செய்யப்படுகிற ஒதுக்கீடு 2,46,000 கோடிகள். அதில், 94,588 கோடிகள் மூலதனச் செலவுகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன. கிட்டத்தட்ட 1 லட்சம் கோடிகள். இதைக் கொண்டு தான் தளவாடங்களுக்குப் பெரிய பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன.அமெரிக்க நிறுவனங்கள் போயிங், ஜெனரல் எலைக்டிரிக் போன்றவை 30,000 கோடி வணிகத்தினை எதிர்பார்க்கின்றன. இஸ்ரேல் 10,000 கோடி வணிகம் சில ஆண்டு களில் வருமெனக் காத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பெரும் சர்ச்சை எழுந்தவுடன் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் .கே.அந்தோணி இத்தகைய வணிக ஒப்பந்தங்கள் மீது புகார்கள் எதுவும் வந்துவிட்டால் அதை விசாரித்த பிறகே மேற்கொண்டு ஒப்புதல் தரப்பட வேண்டுமென்ற விதியைக் கொண்டு வந்தார். தற்போதைய மோடி அரசு இவ்விதியை தளர்த்த முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இவ்விதியை தளர்த்துவதற்கு அவர்கள் சொல்கிற காரணம், “ தேசப் பாதுகாப்பிற்கு நவீனத் தளவாடங்கள் முக்கியம் என்பதே.தேசம், பாதுகாப்பு என்றால் மக்கள் மனதைத் தொட்டுவிடலாம் என்பது வழக்கமான தந்திரம். இன்னொரு காரணம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் கடும் போட்டி இருப்பதால், போட்டியாளர்கள் வேண்டுமென்றே புகார்களையும் உற்பத்தி செய்வார்களாம். இதெல்லாம் கார்ப்பரேட் உலகில் சகஜமப்பா! என்கிறார்கள். கதவைத் திறக்கிறார்கள். நவீன தாராளமய யுகத்தில் ஊழலும் சகஜமப்பா! என விவரமறிந்தவர்கள் சிரிக்கிறார்கள்.தீக்கதிர்.

No comments: