Thursday, 2 April 2015

இமாச்சல்: அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள்...

இமாச்சல் பிரதேச காங்கிரஸ் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அம்மாநிலம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் பரவி வருகிறது.இமாச்சல் பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசானது சமீபத்தில் கல்வி கட்டணங்களை கடுமையாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இப்புதிய கட்டண மானது ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கல்வி கட்டணங்களை காட்டிலும் சுமார் 2 ஆயிரத்து 500 சதவிகிதம் வரை அதிகமாகும். மாநில அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்புதிய கட்டண உயர்விற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன.இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக கல்வி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள ராஷ்ட்ரிய உச்சாட்டார் சிக்ஷா அபியான் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும். மாநில முழுவதும் கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். மாணவர் பேரவை தேர்தல்களை ஜனநாயக பூர்வமாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியன்று அம்மாநில தலைநகரான சிம்லாவில் அமைந்துள்ள சட்டமன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது.இந்த அறைகூவலை ஏற்று அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சட்டமன்ற அலுவலகம் அருகே குவிந்தனர். இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் சிவதாசன் மற்றும் சங்கத்தின் மாநில தலைவர்கள் தலைமையில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி மாணவர்கள் சட்டமன்ற அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஆனால், அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அம்மாநில காவல்துறை கடுமையான அடக்குமுறையை கையாண்டது. மாணவ, மாணவிகள் என்றும் பாராமல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததுடன், சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் சிவதாசன் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதன்பின், சோதனை என்கிற பெயரில் காவல் துறையினர் சிம்லாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.இதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த மாணவர் சங்கத்தின் தலைவர்கள் சிலரையும் காவல்துறை கைது செய்து இழுத்துச் சென்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இமாச்சல் அரசின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இமாச்சல் பிரதேசம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள், கண்டன இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்திட வேண்டும் என வலியுறுத்தி மாநில தலைநகர் சிம்லாவில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைமையில் மாபெரும் பேரணிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மாநில அரசின் அடக்குமுறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

No comments: