Saturday 23 November 2013

வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் 19 டிசம்பர் வேலை நிறுத்தம்.

டிச.19 - வங்கித்துறை வேலை நிறுத்தம்

வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியக் கூட்டம் சென்னையில் புதனன்று (நவ.20) நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து (9) உறுப்பு சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு கே.கே. நாயர் (‘இன்போக்’) தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முரளி (என்.சி.பிஇ) கூட்டத்திற்கான விவாத அறிக்கையை முன்வைத்தார்.மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் சமீபத்திய முயற்சிகளை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்தது. குறிப்பாக, 2013 ஆகஸ்டு மாதம் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கொள்கையறிக்கையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கும், பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைத்து பல்லாயிரக்கணக்கான கிளைகளை மூடுவதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும் அனுமதியளித்த பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.இது மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வாஷிங்டனில் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இந்திய வங்கிகளை ஏற்று நடத்த விடுத்துள்ள அழைப்பு, கூட்டத்தில் கடும் கண்டனத்துக்குள்ளாகியது.வங்கி ஊழியரின் ஒன்பதாவது இருதரப்பு ஊதிய ஒப்பந்தம் முடிவுற்று ஓராண்டு முடிந்த பின்னும், இதுவரை இந்திய வங்கிகள் சங்கத்திடமிருந்து (ஐபிஏ) ஊதியப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவோ, உறுதி மொழியோ சங்கங்களுக்கு தரப்படவில்லை.மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்திய வங்கிகள் சங்கம் கூறுகிறது.மத்திய அரசும் இது பற்றி துளியும் அக்கறை கொள்ளாதப் போக்கையே கடைப்பிடிக்கிறது. ஐபிஏ/ மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்தது.எனவே, மத்திய அரசு/ ரிசர்வ் வங்கியின் தனியார் மயக் கொள்கையை எதிர்த்தும், உடனடியாக நியாயமான ஊதிய உயர்வு கோரியும் இந்தியாவிலுள்ள 10 லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் 19 டிசம்பர் 2013 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

No comments: