Wednesday 23 April 2014

ஏப்ரல்-23 வீராங்கனை லீலாவதி நினைவு நாள்...

17 ஆண்டுகள் உருண்டோடிவிட் டன. ஆனால் இன்றும் அந்த நாள் நம் நெஞ்சில் நீங்காத் துயரத்தை ஏற்றிவிட்டு நிரந்தரமாகக் குடியேறியுள்ளது. ஆம், 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள் தான் அது. இடதுசாரி இயக்கத்திற்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பை ஏற்படுத்திய நாள். அருமைத் தோழர் கே.லீலாவதி, ஆறு சமூக விரோதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள்.
லீலாவதி, ஒரு ஏழை நெசவாளி குடும்பத்தில் 1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாள் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். ஆனால் பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் படிப்பதை நிறுத்தவில்லை. பொது நூலகத்தில் உறுப்பினராகி நூல்களை வாங்கி தொடர்ந்து படித்து பொது அறிவை வளர்த்துக்கொண்டார்.மக்கள் அமைப்புகளில் தீவிர ஆர்வங்காட்டி வந்த லீலாவதி 1987ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும், கைநெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநிலத் துணைத்தலைவராகவும் ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மதுரை மாவட்டக்குழு உறுப்பினரானார். இவ்வாறு தன் இடைவிடாத உழைப்பின் மூலம் பொது வாழ்வில் அவர் உயர்ந்து கொண்டே இருந்தார்.லீலாவதி ஒரு கைத்தறி நெசவாளி. அவருடைய வீட்டிற்குப் போனால் மேல்பகுதியில் தறிநூல் கட்டியிருக்கும். கீழேதான் பாய்போட்டு படுத்திருப்பார்.

மாதர் இயக்கத்தின் மங்காப்புகழ் பெற்ற லீலாவதி சுறுசுறுப்பான ஊழியர். தான் வாழ்ந்த பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகப் போராடியவர். தனது அரசியல், சமூக சேவை பணி மூலம் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். ரேசன் கடை முறைகேடுகள், மாநகராட்சியின் இலவசக் குடிநீரைக் காசுக்கு விற்பது போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பினார். இன்னலுறும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க இடைவிடாது பாடுபட்டு வந்த லீலாவதி, மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. மாமன்ற உறுப்பினரானது முதல் லீலாவதியின் பொதுப்பணி மிகவும் அதிகரித்தது. கோரிக்கை மனுக்களை பெற்று, அவை ஒவ்வொன்றுக்கும் கைப்பட கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவது, மாமன்ற கூட்டங்களுக்கு செல்வது, தினமும் காலையில் தனது வட்டத்திற்குட்பட்ட தெருக்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது போன்ற ஒவ்வொரு பணியையும் நேர்த்தியுடன் செய்துவந்தார்.

அடிப்படை உரிமைகளுக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் வாதாடுவதும் போராடுவதும் தவறான செயலல்லஎன்று மதுரை மாமன்றத்தில் முழங்கியவர் தோழர் லீலாவதி. முழங்கியதோடு மட்டுமல்ல, காரியங்களை முடித்துக் காட்டினார் லீலாவதி. வில்லாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பாக லாரியில் விநியோகிக்கப்படும் குடி நீரை விலைக்கு விற்ற அவலத்தைப் போக்க குழாய் மூலம் குடிநீர் வழங்க ஏற் பாடுகளை செய்தார். ரேசன் கடைகளில் சமூக விரோதிகளின் தலையீட்டைத் தடுத்து நிறுத்தி, எடை குறையாமல் பொதுமக்களுக்குப் பொருட்கள் கிடைக்கச் செய்தார். பொறுக்குமா கொள்ளையடித்து வந்த கும்பல். மேலும் மாமூல் வசூலிப்பதற்கு எதிராக வர்த்தகர்கள் நடத்திய கடையடைப்புக்கு ஆதரவாக முன்னின்றார் லீலாவதி. எனவே அவரைக் கொன்றே தீருவது என்ற வெறித்தனத்தில் இறங்கியது சமூக விரோதக்கும்பல். உரிய நேரம் பார்த்திருந்தது.

1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் நாள் காலை உணவு தயாரித்துக் கொடுக்க எண்ணெய் வாங்க வந்த அவரை சுற்றி வளைத்து வெட்டிக்கொன்றனர் கொலை பாதகர்கள். மக்கள் நலனுக்காக தன்னுயிரை துச்சமென நினைத்துப் பாடுபட்ட லீலாவதி, மக்களுக்காகவே உயிர்நீத்தார். மக்களுக்காக, மார்க்சிய லட்சியத்திற்காக உலகம் முழுவதும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் தியாகிகளின் வரிசையில் லீலாவதி மகத்தான இடத்தைப் பெற்றுவிட்டார்.

லீலாவதியின் ஒப்பற்ற தியாகம் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய நாடுமுழுவதிலும் பேசப்படுகிறது. அவர் கொலையுண்ட தருணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி மரியாதை செய்தது அவரது ஒப்பற்ற தியாகத்திற்கு செய்யப்பட்ட மரியாதையாகும். எனவேதான் தினமணி நாளேடு. “லீலாவதியின் வீடு தமிழகத்தில் அறிவிக்கப்படாததொரு நினைவுச்சின்னமாக இன்று மாறிவிட்டதுஎன்று தலையங்கம் தீட்டியது.
சாவே இல்லை உனக்கு!
மதுரை மக்கள் மனதில்
வாழ்ந்த நீ
தமிழக மக்கள் மனதில்
குடியேறி விட்டாய்!
இனி எங்கள் சந்ததியை
சொல்லி வளர்ப்போம்
வாழ்ந்தால் லீலாவதியாய்
வாழு என்று!”
லீலாவதி சிந்திய இரத்தத் துளிகளிலிருந்து இன்று ஓராயிரம் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருக் கிறார்கள். வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதியின் நினைவுக்கு செவ்வணக்கம்! செவ்வணக்கம்! செவ்வணக்கம்!

1 comment:

Unknown said...

ANBU THOZHA, LEELAVIN NINAIVUGAL NAMADHU NENJIL URAMUTTATUM.NINAIVODU..SOUNDAR