மார்க்சிஸ்ட் தலைவர்பி.டி.ரணதிவே கூறுகிறார் :“.... தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய புகழ்பெற்ற பெரும் வீரரான அம்பேத்கர், ஆரம்பக்காலத்தில் உயர்சாதியினரின் கபடத்தனங்களை அம்பலப்படுத்திக் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கினார். அதற்குப்பின், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமும் தனி குடியிருப்புகளும் கோரினார். இதை ஒரு விவசாயப் புரட்சியின்றிச் சாதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுப்பதன் மூலம் அவர்கள் பண்ணையடிமைகளாக மற்ற சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையைத் தவிர்க்கலாம் என்பது மிகவும் சரியான கருத்தாகும். அதே நேரத்தில் நிலமற்றோர் அனைவரின் பொதுப் போராட்டத்தின்மூலம் இதைச் சாதித்திருக்க முடியும்...“காங்கிரஸ் தலைவர்களுக்கெதிராக வும் அவர்களது கபடத்தனங்களுக்கெதிராகவும், மிகத்தீவிரத் தாக்குதல் நடத்தியவர் டாக்டர் அம்பேத்கரைவிட வேறு எவருமில்லை.
ஆனாலும், காங்கிரஸ்காரர்கள் சமீபக் காலம்வரை ஜனநாயகத்தின் கடைசி வார்த்தை என்று புகழ்ந்து வந்த இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பிரதான சிற்பிகளில் அம்பேத்கரும் ஒருவர். இந்த அரசியல் சட்டத்தின்கீழ்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. கொள்ளையடிக்கப்படுகின் றன. அவர்களது மனைவிகள் கற்பழிக் கப்படுகின்றனர். ஏன் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆகவே அம்பேத்கர், தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை...’தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்குமானால் அவை அந்த மக்களின் உயர்வுக்கு வழி செய்யும், சமூகஒடுக்குமுறை ஒழியும் என்று டாக்டர் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு அடித்தளமாயுள்ளது சொத்துரிமை என்பதையும் அதை ஒழித்துக் கட்டுவதன் மூலமே சமூகக் கொடுமைக்கும் ஒடுக்குமுறைக்கும் இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்பதையும் அவரால் காண இயலவில்லை.ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்குச் சம உரிமையுண்டு என்ற முழக்கத்தைக் கொடுத்த டாக்டர் அம்பேத்கர் அதை நடைமுறையிலும் கொண்டுவரப் பாடுபட்டார். அவர் உருவாக்கிய `இந்துத் திருமணச் சட்ட மசோதாவில்’ சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்ற சரத்தைச் சேர்த்தார். சாதிய மேல்தட்டுப் பகுதியினரின் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா நிறைவேறாமல் செய்யப்பட்டது.
தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற டாக்டர் அம்பேத்கர் அதைக் கைவிட்டுச் சமரசம் செய்துகொள்ள மறுத்தார். சட்ட அமைச்சர் என்ற பதவியையே தூக்கி எறிந்தார். அம்பேத்கரின் நாற்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் சமூக வாழ்வின் சாதனைகளை ஆராயும்பொழுது இரண்டு அம்சங்கள் தெளிவாகப் புரியும்.ஒன்று, எப்பொழுதெல்லாம் அவர், தேசிய சக்திகளுடனும் கம்யூனிஸ்ட்களுடனும் இணைந்து நின்றாரோ அப்பொழுதெல்லாம் அவர் வெற்றி கண்டார். இரண்டு, இணைந்து நில்லாத போது அவர் வெற்றி காண முடியவில்லை. சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, தொழிலாளர் உரிமை காக்கும் நலன் காக்கும் பிரச்சனைகள், மாநிலங்கள் சீரமைப்பு, பெண்கள் உரிமை, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநிலங்களின் உரிமைகள் போன்ற பல பிரச்சனைகளை இவற்றிற்கு உதாரணமாகக் கூறலாம்.
கடந்த காலத்துப் போராட்டங்களை வேகமாக மறு ஆய்வு செய்யும் பொழுது ஒரு முடிவுக்கு நாம் எவ்விதத் தயக்கமுமின்றி நிச்சயம் வர முடியும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, நல்வாழ்விற்காக அம்பேத்கரும் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஓரிரு கட்டங்களில் சேர்ந்து போராடி அந்த மக்களின் உரிமையை நிலைநாட்டிய நிகழ்ச்சிகளைக் காணும்பொழுது இவ்விரு சக்திகளும் மற்ற பிரச்சனைகளிலும் இணைந்து போராடியிருந்தால், அவை மிகவும் வலுவடைந்திருக்கும், புதிய வெற்றிகளை அந்த மக்களுக்கு தேடித் தந்திருக்கும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுவரை கணிச மான பலன் பெற முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.1991 ஏப்ரல் 14 அன்று மும்பையில் நடந்த டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனது உரையின் இறுதியில் முழங்கினார்:“....தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.“டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபமானது, ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யப்பட வேண்டும்...” ஏப்ரல்-14,Dr.அம்பேத்கர் பிறந்த நாள்--S.சூரியன்..D/S-BSNLEU.
No comments:
Post a Comment