‘இந்தக் கேள்விக்கு இது விடையில்லையே...’ என்றால், இத்தாலிக்கார சோனியாவை ஆளவைக்கப் பார்க்கிறீர்களா என்கிறார்கள். நாம் எப்போது அப்படிச் சொன்னோம்? ‘நான் உழைத்துச் சம்பாதித்த என் பணத்தை செல்லத்தக்கதாக்க, அதாவது செலவு செய்ய உகந்ததாக்க நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும் என்றால் என் உழைப்புக்கு என்ன மரியாதை?’ என்பது மட்டும்தான் கேள்வி. ‘நான் வைத்திருப்பதுதான் கறுப்புப் பணமா?’ என்பதுதான் ஐயம்.வங்கியில் வாங்கி ஏமாற்றிய ரூ.9 ஆயிரம் கோடியுடன் மல்லையா இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அங்குபோய் இந்திய ரூபாய்செல்லுமா? அப்படியானால், அவரது கறுப்புப் பணம் பணமாகவா இருக்கும்? ஆக, மிகமிகப் பெரும்பகுதி கறுப்புப்பணம் என்பது பணமாக - இந்தியப் பணமாக இருப்பதில்லை. சொத்தாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் டாலராகவோதான் உள்ளது.
அது சொத்தாக மாறும்வரைதான் கறுப்புப்பணமாக உள்ளது. சொத்தை வாங்கச் செலவு செய்யப்பட்டு சொத்துக்கு உரியவர் வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வரும்போது அது கறுப்புப் பணமாக இருப்பதில்லை.உதாரணமாக, ஒருவர் தவறான வழியில் ஈட்டிய பணத்தில் ஒரு புதிய வீடு வாங்குகிறார். அந்த வீட்டைக் கட்டி விற்றவர், கட்டிடம்கட்டிய கொத்தனாருக்கும், சித்தாளுக்கும் அதிலிருந்து கூலி தந்தால் அந்தத் தொழிலாளியின் கையில் இருப்பது கறுப்புப்பணமா? இப்போது கைப்பற்றவேண்டியது எதனை? அந்த வீட்டையா, அல்லது அந்தத்தொழிலாளியின் கையிலிருக்கிற பணத்தையா?ஆனால், மோடி அரசு தற்போது செய்வது என்ன? கொத்தனாரையும் சித்தாளையும் வரிசையில் நிறுத்தியதோடு, கையில் மையும் வைத்துவிட்டு, ஓடிப்போன மல்லையாவின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது. தாக்குதல் துல்லியமானதாகத்தான் இருக்கிறது, ஆனால் இலக்கு எளிய மக்களாக இருக்கிறார்கள்!1978ல் ரூ.1000 நோட்டுக்கள் தடைசெய்யப்பட்டபோது, அது எளிய மக்களின்கையில் இருந்த நோட்டு அல்ல.
1993ல் எல்ஐசி பணியில் சேர்ந்தபோது என் துவக்கஅடிப்படை ஊதியமே ரூ.980-தான். நடுத்தர வர்க்கம் என்றழைக்கப்பட்ட அரசுஊழியர்களின் ஊதியமே அவ்வளவுதான் என்றால் அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய் நோட்டைப்பயன்படுத்தியவர்கள் பெரும்பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், இன்றைய நிலை அதுவல்ல.ரூ.700 கூலி பெறும் ஒரு கட்டிடத் தொழிலாளி வார இறுதியில் பெறும் ரூ.4200ல் 8 ரூ.500 நோட்டுக்களும், இரண்டு ரூ.100 நோட்டும்தான் தரப்படுகின்றன. என்ன சம்பாதித்தாலும் கூலித் தொழிலாளர்களின் கூலியில் பெரும்பகுதி அடுத்த நாளே கடைகளுக்கு வந்துவிடும். அப்படிச் செலவு செய்ய முடியாமல், தான் உழைத்து ஈட்டிய கூலியைச் செலவு செய்ய இயலாமல் தவிக்கிறார்கள்.
மாற்றித்தர, ஒரு ரூ.1000 நோட்டுக்குப் பதில் 10 ரூ.100 நோட்டுக்களும், ஒரு ரூ.500 நோட்டுக்குப் பதில் 5 ரூ.100 நோட்டுக்களும் தேவை என்பது டீக்கடைக்காரருக்கும் தெரிந்த கணக்குத்தான். நம்மை ஆளும் டீக்கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை?உண்மையில் இது ஏதோ தெரியாமல், தவறுதலாகச் செய்யப்பட்டதல்ல! வெளிநாட்டு கறுப்புப்பணம், ஆளுக்கு ரூ.15லட்சம் என்று விடாமல் கத்திக்கொண்டிருப்பவர்களை அடக்க, ஏதோ நடக்கிறது என்று தோற்றம் ஏற்படுத்த, ஊசி போடுமாறு மருத்துவரை வற்புறுத்தும் நோயாளிக்கு வெறும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஊசிமூலம் ஏற்றி நம்ப வைக்கிற மருத்துவர் போல, நம்மைநம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.
வலித்தால் ஏதோ சிகிச்சை நடக்கிறது என்று நம்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏராளமானவர்கள் மெய்ப்பித்து வருகிறார்கள். நாட்டுக்காகத் தியாகம் செய்ய வேண்டும், ராணுவ வீரர்கள் தியாகம் செய்யவில்லையா, மோடிக்கு பதில் யார்.... என்று ஏராளமான வக்காலத்து இல்லாத வக்கீல்கள் வாதம்புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ராணுவ வீரர்களின் மனைவி, தந்தை போன்றோரும் வரிசையில்தான் நிற்கிறார்கள், அவர்களுக்கும் இதே தொகைதான், இதே மைதான் என்பதை மறந்து விடாதீர்கள்.
எப்போதுமே வெட்கப்பட வேண்டிய செய்திகளைப் பெருமையுடன் பேசுவது பாஜக பரிவாரங்களின் வழக்கம். தங்களதுஆட்சியில் கார்கிலில் ஊடுருவி விட்டார்கள்என்று வெட்கப்படுவதற்கு பதில், விரட்டி விட்டதாகப் பெருமை பேசியவர்கள்! இன்றும் மக்களைச் சிரமப்படுத்தியதையும் பெருமையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் எந்தக் குரலுக்கும் மோடி பதிலளிக்கவில்லை. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் அவரவரின் கற்பனைத்திறனுக்கேற்ப பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே கேள்விக்குத் தொடர்பில்லாத பதில்கள்!
No comments:
Post a Comment