Friday 4 September 2015

செப்டம்பர் -2 வேலை நிறுத்தம் விடுத்துள்ள செய்தி . . .

சுதந்திர இந்திய வரலாற்றின் முக்கியமானதொரு நாளாக இவ்வாண்டின் செப்டம்பர் 2 அடையாளம் பெற்றுவிட்டது. அந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கிற போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயமாக இந்நாளில்தான் நாடுதழுவிய தொழிலாளர் வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றிகரமாக நடை பெற்றுள்ளது. போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் இடம் பெற்றிருந்த ஒரு சங்கம், திடீரென மத்திய அரசுக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்பதாக ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக விலகியது,தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியாளர் களும் ஆளுங்கட்சிகளும் போராட்டத்தை ஒடுக்க முயன்றது,
தொழிலாளர்களைக் குழப்புவதற்காக மோடி அரசின் பல்வேறு தந்திரங்கள் போன்றவற்றை மீறி நாடு முழுவதும் தொழிற் சாலைகள் இயங்க வில்லை.காப்பீடு, வங்கி உள்ளிட்ட துறைகளின் ஊழியர் களும் போராட்டக் களத்தில் இறங்கினர். நேரடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடாவிட்டாலும் ரயில்வே உள்ளிட்ட துறைகளின் தொழிலாளர்கள் ஆதரவு நடவடிக் கைகளில் இறங்கினர். அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினர். பொதுவாக இப்படிப்பட்ட இயக்கங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை ஒரு விரதமாகவே கடைப்பிடிக்கும் பெரும் ஊடக நிறுவனங்கள் கூட இந்தமுறை முன்போல இருட்டடிக்க முடியாது என்ற புரித லுடன் செய்திகளை ஓரளவுக்கு வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் இந்த தேசபக்தப் போராட் டத்திற்கு ஆதரவாக பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் போராளித் தொழிலாளர்கள் மீது ஆளுங்கட்சியி னரின் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.பொதுவாக நாடு முழுவதும் அமைப்பாக அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களது எண்ணிக்கையைக் குறைக்கவும், தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்வதற்குமான தொடர்ச்சியான நடவடிக்கைகள், தாராளமயமாக்கல் பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. எங் கும் ஒப்பந்தத் தொழில்முறை அரசின் ஆதரவோடு புகுத்தப்பட்டு, நிரந்தரத் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்ன ணியில், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுடைய பணிப் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ளது எனலாம்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுவிநியோக முறையைப் பரவலாக்குதல், வேலைவாய்ப்பு களை உருவாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளைக் கை விடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய இந்தப் போராட்டம் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருக்குமானதாகும்.
மாநிலம் மாநிலமாக மத உணர்வு களையும் சாதிப்பாகுபாடுகளையும் கிளறிவிடுகிற அரசியல் நடத்தப்பட்டு வருகிற நிலையில், அதைப் புறக்கணித்து கோடிக்கணக்கான உழைப்பாளிகள் தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருக் கிறார்கள் என்பது முக்கியமானது, உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வாழ்த்துக்குரியது. இதில் உள்ள செய்தியை அரசு உணர வேண்டும், மக்கள் இயக்கங் கள் விரிவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அது புரட்சிகரமான தீர்வுகளை நோக்கிய அடுத்தடுத்த போராட்டங்களுக்கு மென்மேலும் வலுச்சேர்க்கும்.

No comments: