Monday, 7 September 2015

69 எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஏலம் விடுவதா?-சிஐடியு கடும் கண்டனம்...

மத்திய பாஜக அரசானது, 69 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை, தனியாருக்கும், வெளிநாட்டுக் கம்பெனி களுக்கும் ஏலம் விடுவதற்கு சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:குறைவான லாபம் வருவதாகக் கூறி, 69 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை, ஏலம் விடுவதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்திருப்பது, ஏலம் என்ற பெயரில் தேசத்தின் சொத்துக்களை தனியாருக்கும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கையே ஆகும். அரசின் இம்முடிவை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் கடற்கரைப் பகுதியிலும் உள்நாட்டு பகுதிகளிலும் இருப்பதைக் கண்டறியவும், அவற்றை தோண்டி எடுக்கவும், நுhற்றுக்கணக்கான கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களால் செலவளிக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான முதலீடுகள் மற்றும் செலவுகள் குறித்த கணக்குகள் இதுவரை காட்டப்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த முதலீடுகளிலிருந்து எந்த லாபமும் வரவில்லை.இந்நிலையில், தனியாருக்கு விடும் ஏலத்திற்கான ஒப்பந்த விபரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இந்த வயல்களில் இருந்து 20 ஆண்டுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தனியார் சுரண்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது, திறந்தவெளிச் சந்தை விலையில் விற்றுக்கொள்வது மற்றும் சந்தைக்கான உரிமைகளும் தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசுக்கு கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி செலுத்துவதிலிருந்தும் ஒப்பந்தக்காரர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான வருவாய் ஒப்பந்தக்காரர்களுக்கே போய்ச்சேரும்.இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் இந்த துறையை திறந்து விடுவதில், தொடக்கத்தில் உற்பத்தியைப் பகிர்ந்து கொள்வதாகவும், அடுத்த கட்டத்தில் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும், தற்போது வருவாயை பகிர்ந்து கொள்வதாகவும் உள்ளது. இது போன்ற புதிய மாதிரியை தனியார் துறை இயக்குநர்கள் அதிகமான லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றொரு அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவெனில், இந்த புதிய மாதிரி தனியார் துறைக்கே மிகவும் சாதகமானதாகும்.
இது, லாபம் குறைவாக ஈட்டப்படும் வயல்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளப்படாமல், மற்ற பெரிய வயல்களுக்கும் நீட்டிக்கப்படும். இப்புதிய நடவடிக்கை கச்சா எண்ணெய் எடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிகுந்த தொல்லை அளிக்கும். இதன் விளைவாக பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் விலை மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவில் அனைத்து பெட்ரோல் மற்றும் எரிவாயுக்களின் விலை கூடவும் வழிவகுக்கும்.பாஜக அரசின் இந்த நடவடிக்கை தேசத்தின் பொருளாதார நலன்களையும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் பாதிக்கும். குறிப்பாக பொதுத்துறை எண்ணெய்க் கம்பெனிகள் மற்றும் அவற்றின் ஊழியர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்.சிஐடியுவுடன் இணைந்துள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தோழமை அமைப்புகள் மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்களை, பிரச்சாரம் மற்றும் போராட்டங்களின் மூலம் அணி திரட்டுமாறு அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு தபன்சென் கூறியுள்ளார்.

No comments: