விடுதலைப் போராட்ட வீராங்கனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் பி.நாகம்மாள் 4-9-2015 வெள்ளியன்று மதுரையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 87.கம்யூனிஸ்ட் கட்சி குடும்பத்தைச் சேர்ந்த பி.நாகம்மாள் 1940-களில் தனது 11-வது வயதிலேயே தியாகி ஐ.வி.சுப்பையா உருவாக்கிய சிறுமிகள் கலைக்குழுவில் இணைந்தார். இந்தக்குழுவில் தனமணி, சுப்புலெட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தியாகி மதுரை மணவாளன் எழுதிய பாடல்களை இந்தக்குழுவினர் ஆடிப்பாடி மக்களைக் கவர்ந்தனர். விடுதலைப் போராட்டத்தில் மக்களை ஈர்த்தனர்.மதுரை சதிவழக்கில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா ஆகியோருடன் சேர்க்கப்பட்டு சிறையிலிருந்த தோழர் எஸ்.பாலுவை நாகம்மாள் மணந்துகொண்டார். இது ஒரு சாதி மறுப்புத்திருமணமாகும்.விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதன் பின் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங் களிலும் பங்கேற்று சிறைசென்றவர்.
தோழர் கே.பி.ஜானகியம்மாளுடன் இணைந்து பல்வேறு மக்கள்போராட்டங்களுக்கு தலைமையேற்றவர்.இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். மதுரை மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.நாகம்மாள் அந்த அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் மதுரை மாவட்டத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மதுரை, பூந்தோட்டத்திலுள்ள பத்மாசினி படிப்பகத்தை நிர்வகித்தவர்களில் இவரும் ஒருவர். மக்களோடு நெருங்கிப் பழகும் தலைவராக விளங்கிய இவர் தனது குடும்பம் முழுவதையும் கட்சிக்குடும்பமாக வளர்த்தவர்.
1 comment:
விடுதலைப் போராட்ட வீராங்கனைக்கு
வீர வணக்கம்
Post a Comment