ஐ.டி. துறை ஊழியர்களுக்கும் கூட இந்தியாவில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.`மைஹைரிங்கிளப்.காம்‘ எனும் வேலைவாய்ப்பு வலைதள நிறுவனம் 2015-ம் ஆண்டில் ஐ.டி. ஊழியர்களுக்கான உலக அளவிலான ஊதிய ஆய்வை மேற்கொண்டது. அதில், ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளத்தை வழங்குவது தெரியவந்துள்ளது.இந்திய ஐ.டி. மேலாளர்களின் சராசரி ஊதியம் 41 ஆயிரத்து 213 டாலர்களாக (சுமார் ரூ. 27 லட்சம்) இருக்க, பல்கேரியா வெறும் 25 ஆயிரத்து 680 டாலர்கள் (சுமார் ரூ. 17 லட்சம்) சம்பளத்துடன் முதல் இடத்தில் உள்ளது. 30 ஆயிரத்து 938 மற்றும் 34 ஆயிரத்து 423 டாலர்கள் ஊதியத்தோடு முறையே வியட்நாம் மற்றும் தாய்லாந்து அதற்கடுத்த இடங்களைப் பிடித்திருக்
கின்றன.அதைத்தொடர்ந்து இந்தோனேசிய நாட்டின் சராசரி சம்பளம் 34 ஆயிரத்து 780 டாலர்களாகவும், பிலிப்பைன்ஸில் 37 ஆயிரத்து 534 டாலர்கள், இந்தியாவில் 41 ஆயிரத்து 213 டாலர்கள், சீனாவில் 42 ஆயிரத்து 689 டாலர்கள், செக் குடியரசில் 43 ஆயிரத்து 219 டாலர்கள், அர்ஜெண்டினாவில் 51 ஆயிரத்து 380 டாலர்கள் ஆகவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
“மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஐ.டி. துறையின் அவுட்சோர்சிங், உலகளாவிய ஊதியத்தை நிர்ணயிக்கிறது; கீழ்நிலை பொறுப்புகள், திறமைகள் மலிவாகக் கிடைக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டன; மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் குறைவான அளவிலேயே மீதம் இருக்கும் வேலைகளுக்கு, அதிக தேவைகள் உருவாகிவிட்டன; இருந்தாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது.ஆனால், எதிர்கால வளர்ச்சிக்கு, பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலை மாற வேண்டும் என்று ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.அதேநேரத்தில், சிறந்த ஊதியம் பெறும் ஐ.டி. ஊழியர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சுவிஸ் ஐடி ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 465 டாலர்கள், அதாவது சுமார் ரூ. 1 கோடியே 12 லட்சம் ஆகும். அதற்கடுத்த இடத்தில் இருக்கும் பெல்ஜிய ஊழியர்களின் வருமானம் 1 கோடியே 52 லட்சம் 430 டாலர்கள் சுமார் ரூ.1 கோடி ஆகும்.டென்மார்க் 1 லட்சத்து 38 ஆயிரத்து 920 டாலர்கள் ஆண்டு வருமானத்தோடு, சிறந்த ஊதியம் பெறும் ஐடி ஊழியர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 1 லட்சத்து 32 ஆயிரத்து 877 டாலர்கள் மற்றும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 324 டாலர்களோடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.உழைப்பு மலிவாக கிடைப்பதால், இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் நாடாக விளங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.2015, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான கால இடைவெளியில், 40 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 ஆயிரத்து 413 நிறுவனங்களில் பணிபுரியும் இடைநிலை ஐ.டி. ஊழியர்களின் ஆண்டு ஊதியம் மற்றும் ஊக்கத் தொகையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment