Wednesday, 23 September 2015

மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாலப்பணிகளை முடித்திடுக முதல்வரிடம் இரா.அண்ணாதுரை MLA கோரிக்கை.

மதுரை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இரா. அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவர் மனு ஒன்றை கொடுத்தார்.அதில், யானைக்கல்லிலிருந்து - பெரியார் பேருந்து நிலையம் வரை பறக்கும் பாலம் 2012 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. மதுரை மேலக்கால் சாலையில் துவரிமான் மற்றும் பரவையை இணைக்க வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பது பற்றி 2013-14ல் அறிவிக்கப்பட்டது.
வைகை ஆற்றின் இடதுபுறம் குருவிக்காரன் சாலை - பி.டி.ஆர். சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைத்து மேம்பாடு செய்ய 2013-14ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெற்குவாசல் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சிந்தாமணி சாலையில் மேம்பாலம் கட்டுவது என்று 2013-14ல் அறிப்பு வெளியானது.கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில், காளவாசல் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடப்படாமல் உள்ளது. உடனே டெண்டர் விட்டு பாலம் கட்டும் பணி துவக்க வேண்டும்.மேலும் அறிவிக்கப்பட்ட சில பாலங்களுக்கு நில ஆர்ஜிதப் பணியை விரைந்து முடித்து கட்டுமானப்பணிகளை துவக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து துவக்கி முடிக்கப்பட்டால் மதுரை மாநகர மக்களின் நீண்டகால பிரச்ச னையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவியாக அமையும்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

No comments: