Friday 4 September 2015

செப்-5, ஆசிரியர் தினம் -Dr.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்.

வெறுமனே புத்தகத்தைப் பார்த்து படித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டும் ஒரு ஆசிரியருக்கு அழகல்ல. வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவதே ஒரு நல்லாசிரியரின் அழகு. அதனினும் மேலாக ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு. அப்படி ஒருவர் இருந்தார். அவர்தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இன்று அவரது பிறந்த தினம். அவரது விருப்பப்படியே நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியராக இல்லாமல், ஆசிரியர் சமுதாயத்திதற்கே பேராசிரியராக விளங்கிய பெருமகன் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை சொல்லாமல் செய்து காட்டி இன்றளவும் இந்திய ஆசிரியர்களுக்கு பேரிலக்கணமாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன். மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், ராதாகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர். ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றியபோதும் கூட அவர் தனது ஆசிரியப் பணியை கைவிட முன்வரவில்லை. மாறாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாரகப் பணியாற்ற அனுமதி பெற்று பணியாற்றினார். படிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்றது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்திய பிதாமகன் ராதாகிருஷ்ணன். ஒவ்வொரு மாணவருக்கும் உதாரண புருஷர்களாய் ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்களின் உதாரணபுருஷராய் விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமே. சாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது. அத்தோடு நில்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகளும், திறம்பட பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. இந்த அருமையான நாளில், நாம் இன்று இருக்கும் நிலைக்கு, அன்று நமக்குப் போதனை நடத்திய ஆசிரியர்களே காரணம் என்பதை மறவாமல், நமக்கு தாயினும் மேலாக அறிவுப் பால் புகட்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்.--- வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன்.D/S-BSNLEU.

No comments: