Tuesday 1 September 2015

மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் பேராசிரியர் கல்புர்கி படுகொலை பிற்போக்காளர்களின் கோழைத்தனம்...

பேராசிரியர் கல்புர்கி படுகொலையை கண்டித்து, பெங்களூரில், ஞானபீட விருதுபெற்ற மூத்த எழுத்தாளரும், கலைஞருமான கிரிஷ் கர்னாட் உள்பட எழுத்தாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கர்நாடக மாநிலத்தில் பகுத்தறிவுப் பரப்புரையாளர் எம்.எம். கல்புர்கி கொலை செய்யப்பட்டதற்கு, கருத்துரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான கூட்டியக்கமாகியசரிநிகர்வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கர்நாடக அரசு விரைந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள இந்த இயக்கம், தமிழகத்திலும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதி-மத வன்முறைகளுக்கும் எதிராகச் செயல்படுவோருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரிநிகர்சார்பில் திங்களன்று (ஆக.31) வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:கன்னட இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுகிறவரும், சிறந்த ஆராய்ச்சியாளரும், பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவருமான எம்.எம். கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. கடும் கண்டனத்திற்குரிய கோழைத்தனமான இந்தப் படுகொலை தேசத்தின் மனசாட்சியை உலுக்கிட வேண்டும்.ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவருமான கல்புர்கி மக்களின் சிந்தனைத்திறனை முடக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வலுவான கருத்துப்போர் நடத்தியவர்.
சாதியத்தின் இழிவான பாகுபாடுகளையும், மத நம்பிக்கையின் பெயரால் தொடரும் அநீதிகளையும் எதிர்த்து மனிதநேய சக்திகளோடும், சமூகநீதி இயக்கங்களோடும் தோள்சேர்ந்து நின்றவர். கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கைகள் தடைச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியவர்.தாம் அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தின் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு தெய்வீக அருள் உண்டு என்று சொல்லப்பட்டு வந்ததற்கு, அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று கன்னட இலக்கியங்களையும் வரலாறுகளையும் சான்றுகாட்டி மெய்ப்பித்தவர். வினாயகர் ஊர்வலங்கள் திடீரெனப் புகுத்தப்பட்டதன் மதவாத அரசியலை அம்பலப்படுத்தியவர்.இத்தகைய பல்வேறு தொடர்ச்சியான கருத்து வெளிப்பாடுகளை, மாற்றுக்கருத்தின் மூலமாகவோ, சான்றுகள் அடிப்படையிலோ எதிர்கொள்ளும் நேர்மையின்றி, அவதூறு, அச்சுறுத்தல் போன்ற செயல்களில்தான் பிற்போக்கு அமைப்புகளும் குழுக்களும் ஈடுபட்டு வந்துள்ளன. ஏற்கெனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில்,
அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாட்டை, அவரே கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசு விலக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. கருத்தியல் அடிப்படையிலேயே தற்காப்பை அவர் நாடினார், காவல்துறை மூலமாக அல்ல என்பதை இது காட்டுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பகுத்தறிவுப் பரப்புரையாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். மூடநம்பிக்கைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகக் குரல்கொடுத்த இடதுசாரி இயக்கத் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலைசெய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் திட்டமிட்டவர்களோ, செயல்படுத்தியவர்களோ அந்த மாநில காவல்துறையால் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
சரிநிகர்இயக்கம் முனைவர் கல்புர்கி படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுவிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்நாடக மாநில அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவதால் அவற்றைக் கண்காணிக்க காவல் துறையில் தனிப் புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்படவேண்டும், மதவாத, சாதியவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் உள்ள எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசைசரிநிகர்கேட்டுக்கொள்கிறது. கல்புர்கி குடும்பத்தாரின் துயரத்திலும், அவரது வழிகாட்டலை இழந்த கர்நாடக மாநில பகுத்தறிவுப் பரப்புரையாளர்களின் சோகத்திலும் சரிநிகர் பங்கேற்கிறது. தமிழகத்திலும் கருத்துரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் சூழலில், மூடநம்பிக்கை தடைச்சட்டம் இங்கேயும் கொண்டுவரப்பட வேண்டும் என்று சரிநிகர் கோருகிறது. முற்போக்காளர்கள் தங்கள் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்திடவும் கேட்டுக்கொள்கிறது.
கண்டனம் முழங்குக!
கல்புர்கி கொலைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், “இப்படிப்பட்ட வன்முறைகளாலும் அச்சுறுத்தல்களாலும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவோரின் குரலை ஒடுக்கிவிடலாம் என்று மதவாதிகளும் சாதியவன்மம் தலைக்கேறியவர்களும் மூடநம்பிக்கைகளைப் பராமரிக்க முயல்வோரும் நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது என்று சரிநிகர் உறுதிபடக்கூறுகிறது,”என்று கூறியுள்ளது.தமுஎகச மாவட்ட அமைப்புகளும் கிளைகளும் அஞ்சலி நிகழ்ச்சிகள், கண்டன சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட சாத்தியமான வடிவங்களில் கண்டனம் முழங்குமாறும், மூடநம்பிக்கைகளை எதிர்த்துக் களம் காண்போருக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்துமாறும் சங்கத்தின் மாநிலத் தலைவர் . தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கோழைத்தனம்தாத்ன் ஐயா