Saturday 19 September 2015

நேதாஜி 1964 வரை உயிரோடு இருந்தார்?மேற்குவங்க அரசு.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், 1964-ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்திருப்பதற்கான சாத்தியங்களே உள்ளன என்று மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறப்பட் டுள்ளதுநேதாஜியின் மரணம் தொடர்பான மர்மம் இன்றுவரை விலகவில்லை. 1945-ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்பதே, பெருமளவு உறுதிப்படுத் தப்பட்ட செய்தியாக இருக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால், நேதாஜி விபத்தில் இறக்கவில்லை என்ற கருத்தும் நீண்டகாலமாக உள்ளது.
நேதாஜி என்ன ஆனார்? என்பதற்கான பதில் மத்திய அரசின் ஆவணங்களில் உள்ளதாகவும், அதை வெளியிட வேண்டும் என்றும் அண்மையில் பிரச்சனை கிளப்பப்பட்டது. நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பு, நரேந்திரமோடியும் இப்பிரச் சனையைக் கிளப்பினார். தான் பிரதமரானால், அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று அறிவித்தார். ஆனால், பிரதமரான பின் இவ்விஷயத்தில் மவுனமான அவர், ஆவணங்களை வெளியிட்டால், பிற நாடுகளுடனான உறவு பாதிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜி தொடர்பாக மேற்குவங்க அரசிடம் இருக்கும் ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று தடாலடியாக அறிவித்தார்.அதன்படி 12 ஆயிரத்து 744 பக்கங்களைக் கொண்ட, 64 ஆவணங்களை அவர், வெள்ளியன்று போலீஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டார். கண்ணாடி பேழை ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் படிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவிலும் வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஆவணங்களை சி.டி.யாகவும் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.மம்தா வெளியிட்ட ஆவணங்களில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1964-ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்துள்ளார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 1945ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நேதாஜி, 1945-க்குப் பின் 19 ஆண்டுகள் கழித்து 1964-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக இந்தியாவுக்கு திரும்பினார் என்றும், இத்தகவல் அமெரிக்காவின் உளவு அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல் 1941-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி, சீக்கியர் வேடத்தில் அந்த காவலில் இருந்து தப்பியதாகவும் சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.முன்னதாக அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஆவண வெளியீட்டு நிகழ்ச்சியில், நேதாஜி குடும்பத்தினர், அவரது எள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ், முன்னாள் எம்.பி.கிருஷ்ண போஸ் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
நேதாஜி எப்படி இறந்தார் என்பதை மோடி அரசு வெளியிடவேண்டும்: மம்தா
நேதாஜி பற்றிய, மேற்கு வங்க அரசின் ஆவணங்களை வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி, நேதாஜிபற்றியமுழு விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு, மத்தியஅரசு வசம் உள்ள ஆவணங்களைபிரதமர் நரேந்திரமோடி வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.“நேதாஜி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள மேற்குவங்க மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர்; கொல்கத்தா மட்டுமில்லாமல், சென்னை, பஞ்சாப் என எங்குதிரும்பினாலும், நாடு முழுவதிலும் அதுகுறித்த ஆர்வம் உள்ளது; நேதாஜி பற்றிய விபரங்களை வெளியிட்டால் சில நாடுகளுடனான ராஜாங்க உறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவருகிறது; நாம்ஒரு சுதந்திரமான நாடு; நமது தலைவர் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் சூழ்நிலை வரும்போது பிற நாடுகளை பார்த்து பயப்படத் தேவையில்லை; இன்னும் எத்தனை காலம்தான், இதை மறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது? ஆவணங்களை வெளியிட்டால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறுகிறது; கலவரம் வெடித்தால் அதை சமாளிப்பது பற்றித்தான் யோசிக்க வேண்டும்என்று மம்தா கூறியுள்ளார்.நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் 135 ஆவணங்கள் உள்ள நிலையில், அதில், மேற்குவங்க அரசிடமிருந்த 64 ஆவணங்கள் மட்டும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இந்திய அரசு தயங்காமல் ஆவணங்களை வெளியிட வேண்டும்
ஒரு மாபெரும் தலைவரின் முடிவினை அறியும் உரிமை
நாட்டு மக்களுக்கு இருக்கிறது