புதிய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி சென்னையில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இது குறித்து மத்திய - மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன், செயலாளர் ஏ.சுந்தரம் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தமிழக அரசு 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்தும், மத்திய அரசு 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. புதிய திட்டத்தில் நிதி மேலாண்மையிலும், காப்பீட்டுத் துறையிலும் தனியார் அனுமதிக்கப்பட்டு, ஓய்வூதியத்தில் 26
சதவீதம் அன்னிய மூலதனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பழைய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500-ஐ நிர்ணயிக்க வேண்டும்.குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை உயர்த்தி அமைக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், விலைவாசி உயர்வுக்கான நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள் அனைத்தும் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார். மாநிலம் முழுவதிலுமிருந்து 17 சங்கங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக தர்னா போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment