Friday 21 February 2014

தூக்கு மேடை தியாகி பாலுவின் கடைசி நாட்கள் . . .

 இறுதியாக 1951ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதியன்று கவர்னர் பவ நகர் மகாராஜா பாலுவின் கருணை மனுவை நிராகரித்துவிட்டார் என்று சேதி வந்தது. இனி அப்பீல் இல்லை தூக்குதான். அதுவும் இரண்டே நாளில் 1951 பிப்ரவரி 22ல் பாலு தூக்கிலேற்றிக் கொல்லப்பட வேண்டிய நாள் என நாளும் குறிக்கப்பட்டது.அந்த இரண்டு நாட்களும் ஒரு வீரத்தியாகியின் விசுவரூபம் எவ்வாறு இருக்கும் என்று வெளிப்படுத்திய நாட்களாக இருந்தன.பாலுவை பேட்டி கண்டு பேச, அந்த 2 நாட்களிலும் அலை யலையாகக் கூட்டம் வந்தது.
சிறைத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் வந்தனர்.பேட்டி காணவரும் கூட்டத்தை டெபுடி ஜெயிலர் கூட்டி வருகிறார். பேட்டி முடிந்ததும் அவர்களை வெளியில் அனுப்பி விட்டு வேறு கூட்டத்தை அழைத்து வருகிறார். இவ்வாறே 2 நாட்களும் கூண்டிலடைப்பட்ட சிங்கம்போல் பாலு குதித்து எழுகிறார். பாலு ஆஜானுபாகு, உடல் சிகப்பு, உருண்டை முகம், ஒளிவீசும் கண்கள், கோதிவிட்ட சுருள் கிராப்பு வயது 30 இருக்கும்.காணவரும் ஒவ்வொருவரையும் கரம்குவித்து வரவேற்றார். மதுரை வீரன் சாமிபோல் மண்டியிட்டு பேசலுற்றார். அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் தத்துவச் சுடராகவே இருந்தது.முக்கியமான தோழர்கள் பலருக்கு பேட்டியின்போது அருகிருக்க அனுமதி கிடைத்தது. நெல்லை மாவட்ட கம்யூ சதி வழக்கில் ஒரு கைதியாக இருந்த .மா.பா.வுக்கு பேச்சு அருகில் இருக்கவும், பேட்டியின் பேச்சுக்களை குறிப்பு எடுக்கவும் அனுமதி கிடைத்தது. அப்போது எத்திராஜ் நாயுடு ஜெயிலர், குறிப்பு எடுக்க நோட்டுப் புத்தகமும் தந்தார். நல்லவர்.நான் என் சக கான்ஸ்டபிள்களின் குறைகளைப் போக்குவதற் காகப்பாடுபட்டேன். அவர்களை அதிகாரிகள் மனிதர்களாக நடத்த வேண்டுமென்பதற்காகப் போராடினேன். ஒரு கான்ஸ்ட பிளை பூட்ஸ் காலால் உதைத்த வெள்ளை சார்ஜண்டையும் அதேபோல் அவமதித்த இன்னொரு தமிழ் சார்ஜெண்டையும் அடித்து அடக்கினேன். அதற்காக என்னைப் பழிவாங்குகிறார்கள். கொலைக்கேஸில் சம்பந்தப்படுத்தி தூக்கில் ஏற்றப் போகிறார்கள். இது பால்ச்சாமிக்கும் கவர்னர் பவநகர் ராஜாவுக்கும் உள்ள பிரச்சனை அல்ல.
இது ஒரு வர்க்கப் போர். இதில் வெல்லப்போவது தொழிலாளி வர்க்கம்தான்.முதலாளி வர்க்கத்திற்கு என்ன கதி ஏற்பட்டு வருகிறது என்பதை வரலாறே சொல்லுகிறது. அமெரிக்க யுத்த வெறியர்கள் கொரியாவில் போய்ப் புகுந்து வெளியேறவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் கமலை மாடுகள் போல் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரியா சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் அந்த மக்கள் ஜெயிக்கிறார்கள். காரணம், அவர்கள் மார்க்சியம் படித்தவர்கள் என்றார்.“சொர்க்கமும், நரகமும் இருப்பதாகச் சொல்லுவதை நான் நம்பவில்லை. மறுபிறவிகளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஒன்று இருக்குமானால், பேச்சுக்காகச் சொல்கிறேன். நான் செத்தபின் அங்கும் சென்று அயோக்கியர்களை எதிர்த்துப் போராடுவேன்என்று கிண்டலாகச் சொன்னார்.“என்னை ஆயிரம் தடவை தூக்கிலிட்டாலும் நான் மார்க்சிஸ்ட் கொள்கைக்காக நமது வர்க்கத்துக்காகப் பாடுபடுவேன்என்று கர்சித்தார்.மனைவி வீரம்மாள், ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம்குழந்தை சரோஜினியை இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பிவேலி முன்னால் கணவனைக் கண்கொண்டு பார்க்கவும் சக்தியற்று, முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழுதார்.மனைவியையும் குழந்தைகளையும் சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டுஏன் அழுகிறாய்? அழாதே.
ஒரு பெரிய லட்சியத்துக்காக உன் புருஷன் உயிர்கொடுக்கிறான் என்பதற்காகப் பெருமைப்படு. பிள்ளையைக் கவனித்து வளர். கட்சி உன்னை விட்டுவிடாதுஎன்று கூறிவிட்டு குழந்தையை உற்றுப் பரிவுடன் நோக்கினார்.பாலுவுக்குத் தூக்கு என்று தாயாரிடம் சொல்லியிருந்தால், அங்கேயே விழுந்து செத்துப்போகும் என்பதால், யாரும் சொல்லவில்லை. தாயார் வந்து பார்த்தபொழுது பாலு,“என்னாத்தா, எங்கே வந்தே? நேரடியாக ஊருக்குப் போறது தானே. எப்படியும் நான் வந்து சேர்ந்திடுவேன். நீ பயப்படாதேஎன்றார்.தாயோ, “அப்பவெல்லாம் ஜெயில் வாசலிலே சின்னக்கம்பி முன்னாலே வந்து பேசவே, இப்போ பெரிய கம்பி, அறைக்குள் இருந்து பேசுறியே, இதைப் பார்க்கிறப்போ நீ சுலபமாகவா வருவேஎன்று அழுதார்.தூக்கு விஷயத்தை தாயிடம் சொல்ல முடியாமல் தத்தளித்தார் பாலு. தூக்கு என்று சொன்னால் அங்கேயே விழுந்து செத்துப் போகும் கண்ணீரைக் கொட்டினர் தோழர்கள்.இன்னொரு முக்கிய நிகழ்ச்சியையும் பாலு நினைவூட்டினார். அதாவது கட்சி தடை செய்யப்பட்டு, தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது, ஒருநாள் இரவில் வைகையாற்று மைய மண்டபத்தில் நகர்கமிட்டி உறுப்பினர்கள் மணவாளனும், வி.கருப்பையாவும் மே. முனியாண்டியும் இருந்தார்கள். அவர்களை பாலு சந்தித்து ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார்.“என் உயிர்மூச்சு உள்ளவரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார். உயிர் கொடுக்கவும் தயார்என்பதே அந்த வீரசபதம்.இப்பொழுது பாலு தூக்குக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளார்.
மணவாளன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். மே. முனியாண்டிதலைமறைவாக உள்ளார். வி.கருப்பையா மதுரை சிறையில் கைதி கோலத்துடன் இருக்கிறார்.கண்டம் எனப்படும் தூக்குக் கொட்டடியின் `கம்பி அடைப்பு முன்னால் வி.கருப்பையா வந்து நின்றார். பாலுவைக் கண்டதும் பொலபொலவென கண்ணீர் கொட்டுகிறார்.பாலு பேசலுற்றார்.“வாங்க வி.கே.வணக்கம்.
அன்றொரு நாள் இரவில் வைகை மைய மண்டபத் தருகில் தொழிலாளி வர்க்கத்திற்காக பரிபூரணமாக தியாகம் செய்ய வருவீர்களா?” என்று கேட்டீர்கள். “வருவேன்என்று வாக்களித்தேன். அதை நிறைவேற்றிவிட்டேன் என்றார்.தூக்குக் கயிற்றில் உயிர்த் தியாகம் செய்யப் போவதை நினைத்துத் தான் பாலு அவ்வாறு கூறினார் போலும். பாலுவின் வார்த்தைகளைக் கேட்டதும் வி.கே.வாய்விட்டு அழுதுவிட்டார்.மறுநாள் பிப்ரவரி 22, வைகறை 4 மணி. சுருங்கும் இருட்டு. காவலர்கள் தூக்குக் கொட்டடியைத் திறந்தனர். நாதங்கியின் கணீரென்ற சத்தம். பாலுவின் கைகளிலே விலங்கு புஜங்களிலும், இடுப்பிலும் சங்கிலிகள். சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இருபுறமும் காவலர்கள். முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள்.தூக்குமேடையை நோக்கி, வீரசிங்கம் போல் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பாலு நடக்கிறார். வழியெல்லாம் புரட்சி ஓங்குக, கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க! என்ற உக்கிர ஒலிகளை வானதிர ஒலித்தவாறே பாலு முன் செல்கிறார்.வழியிலே இராமநாதபுரம் சதிவழக்கில் வகுப்புக் கைதிகளாக இருந்த பேராசிரியர்கள் சங்கரநாராயணனும், எம்.எஸ்.நாடாரும் தமது அறையின் வாசல் முன் வந்து நின்றுபாலு வாழ்கஎன்றனர். அதற்கு பாலு, “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க, செங்கொடி வாழ்கஎன்று சொல்லுங்கள் என்றார்.எமங்கிரர்கள் சுற்றிச்சூழ, பாலு தூக்கு மேடையிலே நிறுத்தப்பட்டார். பாலுவின் முகத்தினை கருப்பு துணி மறைத்தது. உருவாஞ்சுருக்கு போடப்பட்ட மரணக்கயிறு பாலுவின் கழுத்தை முற்றுகையிட்டது. மாவட்ட பெரிய டாக்டர் நாடிபிடித்து உயிர் இருக்கிறது என்று சொன்னவுடன், ரைட் என்ற சாவொலி கீச்சிட விசைக் கட்டை உருவப்பட்டது.பாலுவின் பாத கமலங்களைத் தாங்கிநின்ற ஆதாரப் பலகை பாதாளம் போயிற்று. சுண்டி இழுத்த கருநாகக் கயிறு, பாலுவின் மூச்சை முடித்தது. கல்லும் உருகும், கருநாகம் நெஞ்சிளகும்.நேற்று இரவு முழுவதும், செங்கொடிப் பாட்டுகளைப் பாடிய பாலுவின்... “சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களைத் தூக்கினிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாதுஎன்று பாடிச் சிறகடித்த செங்குயில் பாலுவின் பொன்னுயிர் பறிக்கப்பட்டுவிட்டது.
காலமெல்லாம் புரட்சி ஓங்குக. பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஒழிக என்று முழங்கிய சுதந்திரப் போராட்ட தியாகி - சுதந்திரம் அடைந்த பிறகும் மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிய மக்கள் தலைவன் - பாலுவின் மூச்சை முடித்துவிட்டார்கள்.ஆத்திரமும் துயரமும் கொந்தளிக்க, சிறைத் தோழர்கள்காம்ரேட் பாலு ஜிந்தாபாத்என்ற இடியோசைகளை மேலும் மேலும் உக்ரமாக எழுப்பினர். நீண்டநேரம் தொண்டையில் நீர் உள்ள வரை.வீரசபதம் : சிறைக்குள்ளேயே கருப்புக்கொடி ஏந்தி கருப்பு பேட்ஜ் அணிந்து, மௌன ஊர்வலம் நடத்தி, தோழர் .மாணிக்கம் தலைமையில் கூட்டமும் நடத்தி, “தோழர் பாலு, மரணத்தையும் திரணமாக மதித்த மகாவீரனே, உன் அடிச் சுவட்டை பின்பற்றி, நீ விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற கடைசி மூச்சுள்ள வரை போராடுவோம்.உன் இரத்தம் தோய்ந்து செங்கொடிக்கும் உன் உயிரை அர்ப்பணித்து சேமித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்புக்கும் மாசு ஏற்படாதபடி காப்போம்என்று முஷ்டி உயர்த்தி சபதேமேற்றனர்.பாலுவின் சடலத்தைக் கேட்டு, பாலுவின் குடும்பத்தினரும் உறவினரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சிறை வாசலை மொய்க்கின்றனர். சடலத்தைக் கொடுத்தால், ஊர்வலம் நடத்தி ஊரையே அதிர வைத்து விடுவார்கள் என பயந்து போன அதிகாரிகள். சிறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டதாகப் பொய் சொல்லி கூட்டத்தினரை போலீஸ் படையைவிட்டுத் தாக்கி விரட்டிவிட்டு சடலத்தை வேனில் எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை ரோட்டில் மெய்வழிச்சாலையடுத்துள்ள தரிசுக்காட்டில் (இப்பொழுது விமான தளம் உள்ள இடத்தில்) சடலத்தை இறக்கி, பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.பிறகு எலும்புகளைச் சேகரித்து திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அடுத்துள்ள பாறைப் பகுதியில் கொண்டு போய் சிதறினார்கள்.
(. மாயாண்டி பாரதி எழுதியுள்ள வீரத்தியாகி  பாலு எனும் நூலிலிருந்து) 22 .02.2014  தோழர் பாலு நினைவு நாள்

2 comments:

Unknown said...

செவ்வணக்கம்

Unknown said...

செவ்வணக்கம்