Monday, 17 February 2014

'சுத்த' தமிழில் சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்கு 'பாடம்'.

திருநெல்வேலி: நெல்லை பல்கலை விழாவில் பங்கேற்ற, சீன வானொலியின் பெண் அறிவிப்பாளர்கள், 'சுத்த' தமிழில் பேசி அசத்தினர்.
.நா., சபையின் 'யுனெஸ்கோ' சார்பில், பிப்., 13 அன்று 'சர்வதேச வானொலி தினம்' கொண்டாடப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தொடர்பியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சீன அரசு வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவு, பெண் அறிவிப்பாளர்கள் ஷன்ஷிங், ஷோசின் பங்கேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் தொகுத்து வழங்கினார். ஷன்ஷிங், ஷோசின் இருவரும், ஒரு வார்த்தை கூட வேறு மொழி கலக்காமல், 'சுத்த' தமிழில் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் நாட்டில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, தமிழையும் எழுத, பேசக் கற்றுக்கொண்டோம். சீன அரசு வானொலியில், அறிவிப்பாளர் பணி கிடைத்தது. தற்போது, தமிழை மேலும் கற்றுக்கொள்வதற்காக, தமிழகம் வந்துள்ளோம். வானொலி நேயர்களுக்காக எங்களது பெயரை, இலக்கியா (ஷன் ஷிங்), ஈஸ்வரி (ஷோ சின்) என, மாற்றினோம்.சீன வானொலியில், 61 மொழிகளில் ஒலிபரப்பு உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ், இந்தி, வங்காளம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தமிழ்ப் பிரிவில் 16 பேர் உள்ளோம்; அதில், 13 பேர் பெண்கள். நாங்கள் தமிழகம் வருவதற்கு முன், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்த செய்திகளை அறிந்து, பெற்றோர் பயந்தனர்; ஆனால், இங்கு மக்கள் நன்றாக பழகுகிறார்கள். இவ்வாறு கூறினர்.
ஷோசின், புதுச்சேரியில் தங்கி தமிழ் பயின்றுள்ளார். பரதம், கர்நாடக இசை பயின்று வருகிறார். தமிழ்- சீன பழமொழிகளுக்கு உள்ள ஒற்றுமை குறித்து ஒப்பீட்டு நூல் ஒன்றை, தமிழில் எழுதி வருகிறார். ஷன்ஷிங், பாரதியார் பல்கலையில், தமிழ் மொழி குறித்து, மேலும் கற்று வருகிறார். நிகழ்ச்சியில், அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் உமா கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்

No comments: