Thursday 13 February 2014

திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார் . . .

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 74.வியாழனன்று காலை பாலு மகேந்திராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் காலை 11 மணியளவில் இயற்கை எய்தினார்.1939ம் ஆண்டு இலங்கை மட்டக்களப்பில் பிறந்தவர் பாலு மகேந்திரா. புகைப்படம் எடுப்பதில் சிறுவயது முதலே அவர் ஆர்வம் கொண்டிருந்தார். லண்டனில் படித்த அவர் பின்னர் புனே திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு படித்து தங்கப்பதக்கம் வென்றார்.மலையாளத்தில் நெல்லு, ராஜகம்சம், மக்கள், ராகம் என தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்தார்.
நெல்லு படத்திற்காக அவருக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கிடைத்தது.கோகிலா என்கிற கன்னடப்படத்தை அவர் இயக்கினார். தொடர்ந்து தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, உன் கண்ணீர் நீர் வடிந்தால், வீடு, சந்தியராகம், ராமன் அப்துல்லா, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் உட்பட ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். இந்தி, தெலுங்கு பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் அவருடைய ஒளிப்பதிவு மிகவும் பேசப்பட்டது. அவர் கடைசியாக இயக்கி நடித்த தலைமுறைகள் படத்திற்கு அவரே எடிட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்திருந்தார். தமுஎகச உள்ளிட்ட இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நேசம் மிகுந்த தோழமையை இழந்துவிட்டோம் என்று இயக்குநர் பாலு மகேந்திரா மறைவுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் .தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயருற்றோம். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கே பேரிழப் பாகும்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்துடன் அவர் தோழமையும், நேசமும், இடையறாத தொடர்பும் கொண்டிருந்தார். சென்னையில் தமுஎச நடத்திய இரண்டு மாநில மாநாடு களின்போதும் அவர் வரவேற்புக் குழு தலைவராக இருந்து திறம்பட பணியாற்றினார்.மேலும் தமுஎகச சார்பில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். தன்னுடைய நுட்பமான ஒளிப்பதி வாலும், இயக்கத்தாலும் நவீன தமிழ் சினிமாவின் முன் னோடிகளில் ஒருவராக அவர் அறியப்பட் டார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த முற்போக்கு இயக்குநர் ரித்விக் கட்டக்கின் மாணவரான அவர் தன்னுடைய படைப்புகளில் மனித நேயத்தையும் சமூக அக்கறை யையும் வெளிப்படுத்தினார்.திரைப்பட பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்திவந்த அவர், இன்றைக்கு தமிழ்த் திரையுலகின் தடம்பதித்துள்ள பல ஆளுமைகளை உருவாக்கிய ஆலமரமாக திகழ்ந்தார். குறிப்பாக இலக்கி யத்திற்கும் திரைப்படத்திற்குமான தொடர்பு மையமாக அவர் விளங்கினார். முற்போக்கு எழுத்தாளர்கள் கந்தர்வன், மற்றும் புதுமைப் பித்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதை களை தனது கல்லூரியில் பாடப் புத்தகமாக வைத்திருந்தார்.
அவர் இயக்கிய `கதை நேரம்தொடரில் பல்வேறு முற்போக்கு படைப்பாளிகளின் சிறுகதைகளை திரை ஓவியமாக்கினார்.அவர் கடைசியாக இயக்கி நடித்த தலைமுறைகள் திரைப்படத்தை 2013ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக தமுஎகச தேர்வுசெய்திருந்தது. பரிசளிப்பு விழா விரைவில் நடைபெறவிருந்த நிலையில் அவர் மறைந்த செய்தி ஆழ்ந்த வேதனையை அளிப்பதாக உள்ளது.அவரது கலைமேதமை என் றென்றும் அவரது புகழை பேசிக் கொண்டே இருக்கும்.

No comments: