உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி
19,1855 - ஏப்ரல்
28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ்
இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள்
உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும்
பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும்
கையெழுத்தேடுகளையும்
சேகரித்திருந்தார்.
வாழ்க்கை
சாமிநாதன் பிப்ரவரி
19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு
அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க்
கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர்
திருவாவடுதுறை
சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி
சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த
கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை
மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
ஏட்டுச்சுவடி மீட்பு - உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில
உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக
சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள்
பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார்.இராமசாமி முதலியார் உ.வே.சாவுக்கு அளித்த சமண சமய நூலான சீவக
சிந்தாமணியின் ஓலைச்சுவடிப்
பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும்
உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.சங்க
இலக்கியங்கள், காப்பியங்கள்,
புராணங்கள்,
சிற்றிலக்கியங்கள்,
எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு
நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பேச்சுத்திறன்
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை
இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப்
பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
பட்டங்கள்
உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச்
21, 1932 அன்று சென்னைப்
பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர்
பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி
18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல்
தலை வெளியிட்டுள்ளது.
நினைவு இல்லம்
உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே. சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தன் வரலாறு
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரிதம் எனும் தலைப்பில் ஆனந்த
விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950
ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித்
தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்)
ஒளிபரப்பப்பட்டது.
No comments:
Post a Comment