தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய ஆச்சி மனோரமாவின் வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்க்கிறோம்....

மாலையிட்ட மங்கை படத்தில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஆச்சி மனோரமா, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து, தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என பல மொழிகளிலும் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார்.அன்புள்ள அம்மா, அவள், அல்லி ராஜ்யம் உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகம் தந்த முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் என 5 முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் ஆச்சி மனோரமா சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சியவர் மனோரமா.
ஒரு சாதாரண மேடை நடிகையாக கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் மனோரமா. இன்றும், இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து, திரையுலகப் பயணத்தை தொடர்ந்தார் ஆச்சி மனோரமா.தமிழக அரசு கலைத்துறையில் வழங்கும் உயரிய விருதான கலைமாமணி விருதைப் பெற்றவர் மனோரமா. கடந்த 2002-ம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு. கேரள அரசின் கலா சாகர் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான அண்ணா விருது, எம்.ஜி.ஆர் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்ற ஆச்சி மனோரமாவுக்கு, கடந்த மார்ச் 8ம் தேதி வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வழங்கி பெருமைப்படுத்தியது புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனம் என்பது குறிப்பிட தக்கது. ஆச்சி மானோரமா அவர்களுக்கு நமது அஞ்சலியையும் இணைக்கின்றோம்.
No comments:
Post a Comment