Saturday 24 October 2015

இந்தக் குழந்தைகளின் குற்றம் என்ன ? . . .

எனது குழந்தைகளும் எனது மனைவியும் செய்த குற்றம் என்ன? நள்ளிரவில் ஒரு கும்பல் வந்தது. எனது வீட்டில் திறந்திருந்த ஜன்னல் வழியாக பெட்ரோலை வீசி தீவைத்தது. எனது குழந்தைகளை உயிரோடு கொளுத்தியது. நாங்கள் செய்த தவறு என்ன? எனக்கு நீதி வேண்டும்“.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டு கதறி அழுத ஜிதேந்தர் குமாரின் கண்ணீர் வார்த்தைகள் இவை.அக்டோபர் 19 நள்ளிரவில், ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள சோன்பெட் கிராமத்தில் சாதி ஆதிக்க வெறிக் கும்பல் ஒன்று, தலித் வகுப்பைச் சேர்ந்த ஜிதேந்தரின் வீட்டினுள் பெட்ரோல் வீசி அவரது இரு குழந்தைகளை கொடூரமான முறையில் உயிரோடு எரித்து கொன்றது. இந்தப் பயங்கர தாக்குதலில் ஜிதேந்தரின் மனைவி கடுமையான தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஜிதேந்தரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், தனது 2 வயது ஆண் குழந்தை வைபவ், 9 மாத பெண் குழந்தை தீபு ஆகியோரைப் பறிகொடுத்துத் தவிக்கும் ஜிதேந்தருக்கோ, அவர்களது உறவினர்களுக்கோ ஹரியானா மாநில பாஜக அரசு ஒரு வார்த்தை கூட ஆறுதல் கூறவில்லை. மாறாக, சாதி வெறி கும்பலுக்கு ஆதரவான முறையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடனே அக்டோபர் 21 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில், ஒரு குழு நேரடியாக மேற்கண்ட சோன்பெட் கிராமத்திற்குச் சென்றது.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இந்தர்ஜித் சிங், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் தலைவர் நாது பிரசாத் மற்றும் பரிதாபாத் மாவட்டத் தலைவர்களும் உடன் சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரையும், அவர்களது உறவினர்களையும் பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஜிதேந்தரை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர், “ஏதுமறியா அப்பாவி குழந்தைகள் 2 பேர் கொடூரமாக எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த புகார்களை படித்து பார்க்கக் கூட ஹரியானா பாஜக அரசின் நிர்வாகத்திற்கு நேரமில்லை. இந்த சம்பவம் மட்டுமல்ல,தலித் மக்கள் பாதிக்கப்படுகிற எந்தவொரு சம்பவத்தையும், ஹரியானா அரசு நிர்வாகம் முற்றிலும் அலட்சியப்படுத்துகிறது. பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு நிவாரணம் என்ற பேச்சுக்கே இந்த மாநிலத்தில் இடமில்லை. குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டு 36 மணி நேரம் ஆகியும், முதலமைச்சரோ அல்லது மாநில அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சிந்திக்கக் கூட இல்லை. இது எவ்வளவு அயோக்கியத் தனமானதுஎன்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதா கட்சியானது, தலித் மக்கள் குறித்து கவலை கொள்வது கிடையாது. தலித் மக்களின் விவகாரத்தில் அக்கட்சி உணர்வற்ற நிலையில் நடந்து கொள்கிறது என்பதை பரிதாபாத் சம்பவமே தெளிவுபடுத்துகிறது. பரிதாபாத்தில் தலித் குழந்தைகள் எரித்துக் கொலை செய்யப்பட்டது மிகவும் வெட்ககரமானது. போலீசார் பாதுகாப்பில் இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி.
வி.கே. சிங் மற்றும் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் தங்களது கருத்து தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ளனர், ஆனால் நாம் அனைவரும், ஆட்சிசெய்யும் கட்சியின் பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் பொதுமக்களுக்கும் குறிப்பிட்ட பொறுப்பை கொண்டு உள்ளோம், எனவே நம்முடைய கருத்தை தெரிவிக்கையில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். நாம் ஆட்சியில் உள்ளோம் என்பதையும், பொதுமக்கள் நமது மீது அதிகமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர் என்பதையும் மறக்கக்கூடாது. கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறி நாம் விலகவும் முடியாது- ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்

No comments: