நாடு முழுவதும் கருத்துச்சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து சாகித்ய அகாடமி விருது பெற்றதமிழ் எழுத்தாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாகித்ய அகாடமி அமைப்பு திட்டவட்டமான சொற்களால் இதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குஅழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகப் படைப்பாளிகளாகிய இந்திரா பார்த்தசாரதி, கி. ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், டி. செல்வராஜ், பூமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களும், இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருவதுகுறித்த எங்கள் அச்சத்தையும்கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னடப் படைப்பாளி எம்.எம். கல்புர்கி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும்அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும். நாடெங்கும் இப்படுகொலைக்கு எதிராக வலுவானகண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில், சாகித்ய அகாடமி இப்படுகொலையை நேரடியான வார்த்தைகளில் வன்மையாகக் கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தமளிக்கிறது.எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில் பொத்தாம் பொதுவான அறிக்கையுடன் அகாடமி நிற்பது போதாது என்று கருதுகிறோம். இன்னும் உறுதியான நடவடிக்கை தேவைஎன அகாடமியை வலியுறுத்துகிறோம்.பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்திய நாட்டின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு முறைகளும்,உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் படைப்பாளிகள் மற்றும் அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும், மக்களின் பன்முகப் பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித்தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் ஒடுக்குவதும் தொடர்ச்சியாக நிகழ்வதைக் கண்டிக்கிறோம். ஒடுக்குவதும் இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்திய நாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச்சுதந்திரம் போன்றவற்றைக் காத்திடவும் மேலும் வளர்த்தெடுக்கவும் அனைத்துப்பகுதி மக்களும், படைப்பாளிகளும் கரம் இணைத்து உறுதியுடன் நடைபோட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment