Monday, 12 October 2015

வங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்திய விஜய் மல்லையா.

ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் தான் பெற்ற ரூ.4,000 கோடி கடனை, அந்தக் கடன் பெறப்பட்டதற்கான நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல் வரிச் சலுகையுடைய நாடுகளில் வேறு பணிகளுக்கு பயன் படுத்திக் கொண்டதாக யுனைடெட் புருவெரீஸ் (யுபி) குழுமத் தலைவரும், கிங்பிஷர் மதுபான ஆலை அதிபருமான விஜய் மல்லையா மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
 
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஐடிபிஐ வங்கி கடன் வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மும்பை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மல்லையாவின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சனிக்கிழமை சோதனை செய்தது.
 
அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், வங்கிகளில் தான் பெற்ற ரூ.4,000 கோடி கடனை வேறு வகையான பயன்பாடுகளுக்கு விஜய் மல்லையா பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு, ஐடிபிஐ, யூகோ வங்கி, கார்போரேஷன் வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 10 பொதுத்துறை வங்கிகள் உள்பட 17 வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ.7,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இதில், கடன் பெறும்போது தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்காக பணத்தை பயன்படுத்தாமல், ரூ.4,000 கோடி பணத்தை வரிச் சலுகையுடைய நாடுகளில் வேறு வகையான பயன்பாடுகளுக்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மடைமாற்றி விட்டிருப்பதை சிபிஐ கண்டறிந்துள்ளது.
 
விஜய மல்லையா தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: