Thursday, 15 October 2015

கண்ணோட்டம்-புத்தகத்தின் ருசி கரையான்கள் அறியாது (or) படைப்பாளிகள் பெருமை பாசிசத்திற்கு தெரியாது.

யாரோ ஒருவர் இறந்ததற்காக இவர்கள் ஏன் விருதுகளை திருப்பித் தருகிறார்கள். அவர்கள் எழுதுவதையே நிறுத்தலாமே? பின்னர் என்ன நடக்கிறது என பார்க்கலாம்?’ இப்படி சொல்லியிருப்பவர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா. இதுதான்பாஜகவின் பண்பாடு. நாட்டில் கருத்துரிமைமீது கட்டாரி வீசப்படுவதை எதிர்த்தும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எதிர்த்தும்நாடு முழுவதும் படைப்பாளிகள் போர்க்கோலம் பூண்டு எழுந்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அவர் இவ்வாறு ஆத்திரத்தை அள்ளி வீசியிருக்கிறார். ஆனால் பிரதமர் மோடியோ, இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்பது போலமுகத்தை வைத்துக் கொண்டு .பி மாநிலம்தாத்ரியில் மாட்டு மாமிசம் வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதும், பாகிஸ்தான் பாடகர் குலாம்அலிகானின் இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதும்துரதிர்ஷ்ட வசமானதுஎன்பதோடுமுடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த சம்பவங்களுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும், எதிர்க்கட்சிகள்தான் பாஜக மீது மதச்சாயம் பூச முயல்கின்றன என்றும் மோடி கூறியுள்ளார். மேலும் அவர்,போலி மதச்சார்பின்மையை பாஜக எப்போதும் ஏற்பதில்லை என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். பன்முகப்பட்ட இந்தியாவின் உயரியவிழுமியங்களில் ஒன்றான மதச்சார்பின்மையை போலி என்று வர்ணிப்பதன் மூலம்இவர்தான் மதச்சாய குளத்துக்குள் மூழ்குகிறார். மதச்சார்பின்மையும், கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் சாகித்ய அகாடமிவிருது பெற்ற படைப்பாளிகள் அனைவரும்மோடியின் பார்வையில் போலிகள்.மோடியின் வார்த்தைகள் மிகவும் பலவீனமானவை என்று உடனடியாக கண்டித்திருக்கிறார் பிரபல கன்னட எழுத்தாளர் ஷாஷி தேஷ்பாண்டே , நாட்டின் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடக்கும்சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.இதற்காகத்தான் மக்கள் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.தாத்ரி படுகொலை குறித்து இப்போதுதான் மோடி மவுனத்தை கலைத்திருக்கிறார். பாகிஸ்தானின் முன்னாள் அயல் துறை அமைச்சர் குர்ஷித் முகமது கசூரியின் நூலுக்கு வெளியீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டது குறித்து அடுத்த மாதம் வாய் திறப்பாரோ என்னவோ? புதுதில்லியில் எழுத்தாளர் நயன்தாரா ஷேகல் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி மென்மையான வார்த்தைகளால் பேசியிருப்பதைக் கண்டித்துள்ளார்.
இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும்சொந்தமானதல்ல; இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது. கருத்துரிமைக்கு எதிராக வளர்ந்து வரும் வன்முறை சகிக்க முடியாதது. நாட்டின் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.மென்மையான வார்த்தைகளால் மோடி பூசி மெழுகியுள்ளதை சிவசேனை கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடைபெற்ற கோத்ரா நிகழ்வுக்கு பிந்தைய கலவரங்களுக்காக மிகவும்புகழ்பெற்றவர்,
மதிப்பு பெற்றுள்ளவர்என்று பாய்ந்துள்ளார்.கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை, தாத்ரியில் நடைபெற்ற படுகொலையை எதிர்த்து இதுவரை 27எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்யஅகாடமிவிருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். பஞ்சாபை சேர்ந்த எழுத்தாளர் தலீப் கவுர்சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்துபத்ம ஸ்ரீவிருதையும் திரும்பத் தந்துள்ளார். அவர்களது ஆத்ம உணர்ச்சி மதிக்கத்தக்கது. ஆனால் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அந்த படைப்பாளிகளை கொச்சைப்படுத்தியுள்ளார். அவசர நிலை காலத்தின் போதும் முசாபர் நகர் கலவரத்தின் போதும்இந்த எழுத்தாளர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளார். அவசர கால பொறுமைகளை பல எழுத்தாளர்கள் கண்டித்தனர். அப்போது எழுந்ததுதான் தமுஎகச என்பதை ரவிசங்கர் பிரசாத்அறிந்திருக்க மாட்டார். முசாபர் நகர்கலவரம் ஆர்எஸ்எஸ் கும்பலின் திட்டமிடட்டசதி. அதுவும் கண்டிக்கத்தக்கதே.
எழுத்தாளர்கள் கொந்தளித்து எழுந்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டனர். இந்த கருத்தை வெளியிடுவதற்காகத்தான் மத்திய அமைச்சரவை கூடியிருக்கிறது போலும். இதற்கு கூடாமலேயே இருந்திருக்கலாம்.விருதை திரும்பக் கொடுத்து அரசின் கவனத்தை ஈர்க்க முயல்வது ஒரு வகை என்றால், சாகித்ய அகாடமி விருது பெற்றதமிழக படைப்பாளிகள் வேறொரு வகையில் ஒன்றுபட்டு தங்கள் எதிர்ப்பை மோடிஅரசுக்கு தெரிவித்துள்ளனர். எந்தவொருமாநிலத்திலும் விருது பெற்ற படைப்பாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டறிக்கை வெளியிடாத நிலையில் தமிழகத்தில் இந்த ஒன்றுபட்ட முயற்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் முன்கையெடுப்பால் சாத்தியமாகியிருக்கிறது.தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற மூத்த படைப் பாளிகள் முதல் இளையபடைப்பாளிகள் வரை ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நடை பெற்றுக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை சாகித்ய அகாடமி கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு ள்ளனர்.பன்முகப் பண்பாடுகளின் வண்ணக் கலவையே இந்தியா என்று குறிப்பிட்டுள்ள 16 படைப்பாளிகள் மதச்சார்பின்மை அச்சுறுத் தப்படுவதையும் கருத்துச் சுதந்திரம் தாக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சாகித்ய அகாடமி முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இவர்களோடு சாகித்யஅகாடமி விருது பெற்ற படைப்பாளி திலகவதியும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக எழுத்தாளர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு எழுந்துள்ளது. இந்த ஒற்றுமை மேம்பட வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மோடி அரசு அனைத்து கல்வி மற்றும்கலாச்சார அமைப்புகளில் காவிக் கும்பலை வேக வேகமாக திணித்து வருகிறது. புனே திரைப்படக் கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஆசாமி கஜேந்திர சவுகான் என்பவரை அமர வைத்தது. இதை எதிர்த்து பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அசைய மறுக்கிறது. உயர் ஆய்வு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு நிறுவனங்களை காவி மேகம் சூழ்ந்துள்ளது. இந்தப் பின்னணியில் சாகித்ய அகாடமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து கூறியுள்ள கருத்து மனங்கொள்ளத்தக்கது. ‘எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்ப்பது நியாயமானது; இது பற்றி விவாதிக்க வரும் 23ம் தேதி அவசரக் கூட்டம் ஒன்றை சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருக்கிறது. சாகித்ய அகாடமி செயல்பட முனைந் திருக்கிறது. சாகித்ய அகாடமியிலிருந்து மதச்சார்பின்மை ஆதரவாளர்கள் விலகுவதன் மூலம் ஏற்படும் காலி இடங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சக்திகள் நுழைந்து விடும்வாய்ப்புகள் உண்டு. அதை தடுப்பதற்காகவாவது அவர்கள் பதவி விலகலில் இருந்து பின்வாங்க வேண்டும்என்ற பொருளில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். சாகித்யஅகாடமியை அசைய வைத்ததில் விருதுகளை திரும்ப ஒப்படைத்த படைப்பாளிகளுக்கு ஒரு பங்கு இருப்பது போல ஒன்றுபட்டு குரல் கொடுத்த தமிழக படைப்பாளிகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. படைப்பாளிகள் சமூகத்தின் மனசாட்சி. பாசிச அபாயம் உலகளாவிய முறையில் எழுந்து நின்ற போது பல புகழ் பெற்ற படைப்பாளிகள் தங்களது எதிர்வினையை படைப்பின் வழியாக பதிவு செய்தார்கள். ஆவேசமாக தங்களது கருத்து ஆயுதத்தின்மூலம் போராடினார்கள். இந்தியாவில் தற்போது பாசிச பாணி அபாயம் எழுந்துள்ள நிலையில் அதை எதிர்த்து படைப்புச் சமூகம் எழுந்திருப்பதை குடிமைச் சமூகம் வரவேற்க வேண்டும். அவர்களோடு இணைந்து நிற்க வேண்டும். எழுதக் கூடாது என்று கூறுபவர்களுக்கு எதிராக எழுதிக் குவிக்க வேண்டும். பேசக்கூடாது என்பவர்களுக்கு எதிராக பேசித்தீர்க்க வேண்டும். வரலாற்றில் படைப்பாளிகள்தான் நிலைத்துள்ளனர். அவர்களை எதிர்த்தவர்கள் கால வெள்ளத்தில் காணாமல்போய்விட்டார்கள். புத்தகத்தின் பெருமையை கரையான்கள் அறியாது. படைப்பாளிகளின் பெருமையை ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் அறியாது.

No comments: