மதுரை மாநகரில் தொழிலாளர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தலைமை தபால் நிலையம் முன்பு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்கள் நடத்த முன்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது காவல்துறையால் இதுபோன்ற இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. சிஐடியுவைப் பொறுத்தவரை இதுதொழிற்சங்க ஜனநாயகத்தை மறுப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமை என்றும் பார்க்கிறது. இன்றைக்கு மத்திய, மாநில அரசாங்கங்களும் இப்படிப்பட்ட தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது.மதுரையில் கடந்த ஆகஸ்ட் 16,17 தேதிகளில் சுமைப்பணி தொழிலாளர்களின் 7வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 9.10.2015ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக இயக்கங்களை நடத்த அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அடிப்படையில் மதுரை மாநகரும், புறநகரும் சேர்ந்து சுமைப்பணி சங்கங்களின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை நலவாரிய அலுவலகம் முன்பு 9.10.2015ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. மனுவை பார்த்த காவல்துறையினர் அனுமதி மறுத்து 6.10.2015ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தனர்.மறுக்கப்பட்ட மனுவில் நலவாரிய அலுவலகம் முன்பு சாலைப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. போக்குவரத்து இடையூறு ஏற்படும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும். ஆகவே அனுமதி மறுப்பு என்று உண்மைக்கு புறம்பாக கூறியிருந்தது.உடனடியாக 7.10.2015ம் தேதியேமதுரை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக மதுரை மாநகர் சுமைப்பணி சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
காவல்துறை சொன்ன காரணம் பொய்யானது. ஒருதுறை சம்பந்தப்பட்ட கோரிக்கை என்றால் தொழிலாளர்கள் அந்ததுறை முன்புதான் இயக்கம் நடத்துவார்கள் என்பதை வலியுறுத்தினோம்.நீதிமன்றத்தில் காவல்துறை சொன்ன காரணம் பொய்யானது என்பதை நிரூபித்தோம். கோரிக்கை சம்பந்தமான நோட்டீசும் உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்து 9.10.2015ஆம் தேதி மதுரை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று 8.10.2015ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அந்த அடிப்படையில் நிச்சயித்தபடி 9ஆம் தேதி மதுரைநலவாரிய அலுவலகம் முன்பு மதுரை புறநகர், மாநகர் சுமைப்பணி சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தொழிலாளர்களின் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டால் சிஐடியு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பதை காவல்துறைக்கு உணர்த்தியுள்ளோம். வழக்கை வழக்கறிஞர் ஏ.ஹாஜா மைதீன் நடத்தினார்.-எஸ்.குணசேகரன்.
No comments:
Post a Comment