அக்டோபர் 23 - 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.போல்ஷெவிக் புரட்சி (Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது.
நவம்பர் 7, 1917 (பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25) இல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது.
இது கார்ல் மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சியாகும்.இந்தப் புரட்சி, ரஷ்ய இடைக்கால அரசாங்கத்தை வீழ்த்தியது. இதன் பின்னர் 1918 தொடக்கம் 1920 வரை இடம்பெற்ற உள்நாட்டுக் கலகங்களைத் தொடர்ந்து, 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.தொடக்க காலங்களில் இந்த நிகழ்வு அக்டோபர் எழுச்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. லெனினின் எழுத்துக்களின் முழுமையான தொகுப்பின் முதல் பதிப்பு உட்பட்ட ஆவணங்களில் இவ்வாறே உள்ளது. காலப்போக்கில் அக்டோபர் புரட்சி பெரும் உலகளாவிய முக்கியத்துவம் உடைய நிகழ்வாகக் கருதப்பட்டது.ரஷ்யாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றிய பனிப்போருக்கான அடித்தளம் இட்ட தொடர் நிகழ்வுகளில் முதன்மையானது இதுவேயாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
No comments:
Post a Comment