Wednesday, 15 July 2015

100 நாள் வேலை குறைவான கூலி - ஆதார் அட்டை கேட்டு நிர்ப்பந்தம்-முற்றுகை.

நூறு நாள் வேலை திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதைக் கண்டித்து விவசாயத்தொழிலாளர்கள் மதுரைமேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.முற்றுகைப் போராட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் பூமிநாதன், மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.தனபாலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுரை குலமங்கலம் ஊராட்சியில் பணித்தளத்தில் வேலை உறுதியளிப்புச் சட்டம் கூறும் அளவின் அடிப்படையில் மண்ணை வெட்டியெடுத்தும் ரூ. 183 கூலி வழங்குவதற்குப் பதில் ரூ.75 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும்.ஆதார் அட்டை கொண்டு வந்தால் தான் வேலை என்றுசட்டம் கூறவில்லை. ஆதார்அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது. சம்பளத்தை இழுத்தடிக்காமல் முறையாக வழங்க வேண்டும்.அனைத்து ஒன்றியங்களிலும் நூறு நாள் வேலையை அமல்படுத்த வேண்டும். வேலை நாட்களை 300 நாட்களாக அதிகரிக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். முற்றுகையில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.ஜூலை 11-ஆம் தேதி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.மணி குலமங்கலம் கிராமத்திற்குச் சென்று நூறு நாள் வேலை செயல்பாடுகள் குறித்து தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது இத்திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளையும் குறிப்பாக ஆதார் கேட்டு நிர்ப்பந்திப்பதையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இப்போராட்டம் நடைபெற்றது.குலமங்கலம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் ஆதார் கேட்டு தொழிலாளர்களை மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: