உலக பல்கலை., விளையாட்டு தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார் இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் சிங்.
தென் கொரியாவில் உள்ள குவாங்ஜு நகரில், உலக பல்கலை., விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்களுக்கான குண்டு எறிதலில், 20.27 மீ., துாரம் எறிந்த இந்தியாவின் இந்தர்ஜீத் சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் உலக பல்கலை., விளையாட்டு தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர, இம்முறை இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இது, இந்த ஆண்டு இந்தர்ஜீத் கைப்பற்றிய 5வது தங்கப் பதக்கம். சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இவர், தாய்லாந்தில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தொடரின் மூன்று சுற்றிலும் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.இப்போட்டியில் அடுத்த இரண்டு இடங்களை ருமேனியாவின் மரியஸ் காக் (19.92 மீ.,), ரஷ்யாவின் அலெக்சாண்டர் புலானோவ் (19.84 மீ.,) ஆகியோர் பிடித்தனர்.ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு துப்பாக்கி சுடுதலில் அக்சய் ஜெயின், பிரதாப் சிங், அம்ரந்தர் பால் சிங் சவுகான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது. தங்கம், வெள்ளிப் பதக்கத்தை முறையே ரஷ்யா, தென் கொரிய அணிகள் கைப்பற்றின.இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் உட்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம், கலப்பு அணிகளுக்கான ‘காம்பவுண்டு’ பிரிவு வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
No comments:
Post a Comment