மத்தியப் பிரதேசம் தொழிற்கல்வி தேர்வு வாரியத்தின் ஊழல் இந்தியில் சுருக்கமாக “வியாபம் ஊழல்’’ என்று அழைக்கப்படுகிறது. வியாபம் ஊழல் தொடர்பாக முதல் முறையீடு 2000 ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் 2007ஆம் ஆண்டில்தான் இந்த ஊழல் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப ரீதியாக நடந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. ஆயினும் இவற்றின் மீதான புலனாய்வு மற்றும் கைதுகள் 2013ஆம் ஆண்டில்தான் துவங்கின. மத்தியப் பிரதேச தேர்வு வாரியம், அரசாங்கத் தின் வேலைகளுக்காக நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது என்பது, மத்தியப் பிரதேச உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலகம் 2007-08ஆம் ஆண்டில் நடத்திய தணிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு சட்ட விரோதமான முறையில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.
2013 ஜூலையில் இந்தூரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் 20பேரைக் கைது செய்தனர். இவர்களில் 17 பேர் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள். இந்த வியாபம் ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர், டாக்டர் ஜக்தீஷ் சாகர் அவர் ஜூலை 12 அன்று கைது செய்யப்பட்டார்.வியாபம் ஊழலின் நடைமுறைகள் எப்படி?ஆள் மாறாட்டம்: தேர்வு எழுதுபவரின் நுழைவுச் சீட்டில் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் புகைப் படம் மட்டும் மாறியிருக்கும். ஆள்மாறாட்டம் செய் பவரது புகைப்படம் அதில் இருக்கும். ஆள் மாறாட்டம் செய்பவர் புத்திசாலியாக இருப்பார். அவர் மக்கு மாணவருக்காக தேர்வு எழுதுவார்.
தேர்வு முடிவுகள் வந்தபின், அந்த மாணவர் அதிக மதிப்பெண்கள் எடுத்ததாக முடிவுகள் வரும். தேர்வு முடிவுகள் வந்தபின்பு விண்ணப்பப் படிவத்தில் புகைப்படம் மாற்றப்பட்டுவிடும்.அடுத்து பணம் கொடுத்த நபரை புத்திசாலி மாணவர்களுக்கு இடையே அமர வைப்பார்கள். அவர் புத்திசாலி மாணவர்களின் விடைகளை நகல் எடுத்து தேர்ச்சி அடைய வேண்டும். இது இரண் டாவது வகை.கொடுக்கப்படும் விடைத்தாள்களில் காசு கொடுத்த மாணவர்கள் எதையும் செய்ய வேண்டாம். அப்படியே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் அளித்த தொகைக்கேற்ப அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அந்த விடைத்தாள்களையும் அவர்களே பூர்த்தி செய்து கொள்வார்கள்.இவ்வாறுதான் இந்த ஊழல் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது.
No comments:
Post a Comment